பக்கம் எண் :

222துரை-மாலிறையன்

சிலையே நான் கூறு யார்?

வைத்த அச்சிலையை நோக்கி வள்ளலார், “சிலையே நான் யார்?
மைத்தவழ் கண்ணார் கேட்க மலர்ந்திடு வாயால்” என்றார்;
பொய்த்த இவ் வுலகில் தாங்கள் புதுப்பிறப் பெடுத்து வந்தீர்;
உய்த்தபே ரருளே கொண்ட ஒளிமுகில் நபியே நீவிர்; 70

நீரே இறைவனின் தூதர்

“திங்களின் ஒளியால் இந்தச் சீர்புவி ஒளியே கொள்ளும்
எங்களின் இருளைப் போக்க இனியதாம் ஒளிகொண்டுள்ள
தங்களின் இறைவன் உய்த்த தனிஒரு தூதாய் வந்தீர்
எங்ஙனம் தங்கள் மாண்பின் இயல்பினை முழுதும் சொல்வேன்? 71

நம்பிக்கை கொள்வார் இன்பம் காண்பார்

“அருளிய மறையின் உண்மை அன்பினை அறிந்தி டாமல்
மருளினில் மயங்கு வார்கள் மண்ணைவிட் டிருளில் ஆழ்வார்
பொருள்தரும் தங்கள் பொன்னார் புகழினை நம்பு வோர்கள்
ஒருபெரு வீடுபேற்றின் ஒளியிலே இன்பம் காண்பார்” 72

இது தலைவர் முன் பேசியதே!

எனச்சிலை உரைக்கக் கேட்ட எழில்குசைன் “என்னே! என்னே
மனச்சிறை அதனில் வைத்தும் மாண்புகள் பலவும் செய்தும்
எனக்குமுன் ஒரு சொல் லையும் இயம்பாஇவ் உருவும் இந்நாள்
தனக்குநேர் இல்லா இந்தத் தலைவர்முன் பேசிற் றீங்கே! 73

இசுலாமாய் மாறினான்

“புதுமைதான்” என்று கூறிப் புகழினார் அடியைப் போற்றிப்
பதுமையைப் பேச வைத்தீர் பக்குவம் பலவும் சொன்னீர்
முதுமையே வந்தால்கூட முகம்மது நபியே மாறேன்
இது மெய்யே!” என உரைத்தே இசுலாத்தைத் தழுவிக் கொண்டான். 74

அன்பினால் எல்லாம் ஆகும்

அன்பினால் உலகில் ஆகா அருஞ்செயல் எதுவும் இல்லை
என்பதை உணர்த்து தற்கே எழிற்சிலை பேச வைத்தார்
பண்பினால் உலக மக்கள் பரிவுளம் கவர்ந்த அண்ணல்
துன்பையும் மாற்றார் செய்யும் தொல்லையும் பொறுத்துக் கொண்டே! 75

***