பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்223


8. கதீசா பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்

பகைவர்கள் கலங்கினர்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தோர் ஒதுங்கிட இறைவன் அல்லா
பேரைவிட்டு எழுதி வைத்த பிழையான செய்தி எல்லாம்
பாரைவிட்டு அகலுமாறு பரமனார் செய்தார்; அன்பு
வேரைவிட்டு அழிந்தார் எல்லாம் விதிர்விதிர்ப் படைந்தார் அம்மா! 1

தவறான நெறியில் சென்று கலங்கினோம்

நன்னெறி வளர்க்க வந்த நாயகர் தமை நாடிப் போய்ப்
“பொன்னெறி இதுவே நல்ல புகழ்நெறி கண்டோம்; முன்னர்ப்
புன்னெறி வாழ்வில் மாட்டிப் புனிதமே கெட்டோம்” என்றும்
கன்னெறி முள்நெறிப் போய்க் கலங்கினோம்” என்றும் சொன்னார். 2

அபூத்தாலிப்பு உடல்நலம் குன்றுதல்

அரியவர் நபியார் தாம்செய் அருள்நெறி தொடர்ந்தார்; நெஞ்சு
கரியவர் விரும்பிச் செய்த கயமையைத் தொடர்ந்து மேலும்
விரியவே செய்தார் அந்நாள் விழைநபி மதித்துப் போற்றும்
பெரியவர் அபூத்தாலிப்பும் பெருநலம் குன்றினாரே! 3

உடல்நிலை மேலும் மோசமானது

அடுத்தடுத்து உடலில் காய்ச்சல் அடங்காத இருமல் மூச்சே
எடுத்தெடுத்து இறைக்கும்; நாவில் இருப்பதோ-இறைவன் பேச்சே
உடுத்து எடுப்பான மெய்யோ உருத்தடுமாறிப் போக
நடுத்திகழ் அபூத்தாலிப்பு நலம் குன்றி வாடி னாரே! 4

தரையில் தவித்தார்

நடக்கவே இயல வில்லை; நாவிலோ உணர்ச்சி இல்லை;
முடக்கிய கைகால் மெய்யில் முன்போல வலிமை இல்லை;
அடக்கிய ஆர்வம் எல்லாம் அகம்மது மேல்பேர் அன்பே!
தடக் களிறதனைப் போன்றோர் தரைக்கு மேல் தவிப்புற் றாரே! 5