பக்கம் எண் :

224துரை-மாலிறையன்

சிந்தனையும் தடுமாறிற்று

தந்தையார் அபூத்தாலிப்பின் தகாப்பிணி நிலையைக் கண்டு
நொந்தனர் நபியார் அன்னார் நோகாத வகையில் செய்து
வந்தனர் பணிவிடைகள் வருத்துநோய் மேலும் தோன்றிச்
சிந்தனை தன்னைக் கூடச் சிதறச் செய் திடவே கண்டார். 6

அண்ணலே! இப்போதாவது இசுலாம் நெறியைச் சேருங்கள்

அண்ணலார் அபூத்தாலிப்பின் ஆவியும் தளர வையப்
பண்ணலார் நபியார் அன்புப் பார்வையால் அவரை நோக்கிப்
“புண்ணிலா(து) உலகைக் காக்கும் புகழ்நெறி இசுலாம் நாட
எண்ணலாம் இன்னும் கூட எந்தையே!” என்றார் ஆங்கே; 7

மீண்டும் கூறினார்

“காதுகள் மந்த மான காரணம் தன்னால் ஈங்கே
ஓதுநம் உரை கேட் காதோ” எனஉணர்ந்து ஒளியார் மீண்டும்
“தீதிலாக் கலிமா கூறித் திகழுக அண்ணால்!” என்றார்;
தோதுள இடம்பார்த் தாங்கே தோன்றிய நெஞ்சத் தீயோன்; 8

அபூசகுல் தோன்றி எதிர்த்தான்

பொங்கிய சினத்தான் அன்பைப் பொசுக்கிய அபூசகுல்தன்
மங்கிய மனத்தைக் காட்ட மாந்தரை விலக்கி, ஆலைச்
சங்கொலி போலக் கூவிச் சட்டென ஆங்கே வந்து
கங்குலின் இருண்ட நெஞ்சால் கத்தினான் கனைத்தான் நின்றே; 9

தீய பண்பைத் தெரிவித்தான்

“வழிவழி வந்த நந்தம் வளமான மரபை மாற்றக்
கழிமிகு முயற்சி செய்யும் கள்ளற்குத் துணைபோ காதீர்;
அழிவினை நாடிப் பின்னர் ஆவியை விடாதீர்” என்றே
பழிவினை புரியும் தன்தீப் பண்பினைக் கக்கி னானே! 10

அபூத்தாலிப்பு ஏதோ கூறினார்

கக்கலும் கனைத்தலும் போல் கலக்கிய நெஞ்சன் முன்னர்
மக்களும் ஒக்கலும் சூழ் மாண்பினார் அபூத்தாலிப்பு
தக்கதோர் நெறியைச் சொன்ன தகுமுகம்மது வினார்க்கும்
மக்கமா நகரத் தார்க்கும் மலர்ந்தனர் ஓர் வாய்ச் சொல்லே! 11