| 
       
      அபூத்தாலிப்பு அண்ணலின் ஆவி அடங்கியது
       
      
      நல்லியல் பில்லான் சொன்ன நயமிலா உரையில் மூழ்கி 
      மெல்லிய இயல்ப தாக; மேன்மையார் உடலம் தன்னைப் 
      புல்லிய ஆவி நீங்கிப் பொன்னுலகு அடைந்த போது 
      சொல்லிய சொல்லைச் சூழ்ந்தோர் சுடர் செவி உணரவில்லை.		12
       
      
      நபிப்பட்டம் பெற்றுப் பத்து ஆண்டுகள் 
      எட்டு மாதம் பதினோராம் நாள்
       
      
      பட்டம் பெற்று எட்டு திங்கள் பத்தாண்டுப் பதினோராம் நாள் 
      எட்டுஞ்சீர் அபூத்தாலிப்பின் இன்னுயிர் நீங்கிச் சென்று 
      முட்டும் வான் தன்மேல் ஏறி முட்டாமல் அருள் வழங்கும் 
      பட்டுப் பொன் ஒளியின் நல்லான் படரும் விண்நாடு ஏகிற்றே!		13
       
      
      முகம்மது கலங்கினார்
       
      
      உதவும் நல் இதயம் கொண்டோர் உறுபிரி வாற்றா மையால் 
      மதியம் ஓர் பகல் வானத்தில் மறைந்திருப் பதனைப் போன்றும் 
      இதயம் மீக் கவலையுற்றே இனியநன் னபியார் கொண்ட 
      புதையல் தான் இழந்தார் போன்றும் பொலிவேதான் இழந்திருந்தார்;	14
       
      
      கதீசா அம்மையார் நோயுறுதல்
       
      
      முதியோர்தாம் மறைந்து விட்ட மூன்றாம் நாள் இனிமை சான்ற 
      மதிபோல்நன் முகத்து நல்லார் மாண்புறு துணைவி யாரும் 
      அதிரும் நோய்க் குள்ளே வீழ்ந்தார் அவர்நிலை கண்ட செம்மல் 
      “கதிசாவே!” என்று கூறிக் கலங்கினார் உணங்கி னாரே;			15
       
      
      கதீசா விண்ணகம் அடைந்தார்
       
      
      எவர் எந்த இடத்தை விட்டே ஏகினும் அவர்கள் அந்தத் 
      தவறிலா இடத்தை நாடல் தகுதியே” என்பார்; நந்தம் 
      நவையிலாக் கதீசா! அம்மை நல்லுடல் மெலிந்தார்; நோயால் 
      புவியக வாழ்வை நீத்துப் பொன்னகம் தன்னுள் புக்கார்;			16
       
      
      நபியார் தனிமையில் வாடினார்
       
      
      தந்தையும் போனார்; தம்மைத் தாங்கிய துணையும் போனார் 
      சிந்தையில் நின்ற இன்னார் செய்ந்நலம் அற்ற தாலும் 
      வெந்தனர் கோமான் உள்ள வேதனை மிக்க தாலே; 
      செந்தணல் மனத்தார் தாமோ செய்தீமை எளிதென் றார்த்தார்!		17
       
   |