அபூத்தாலிப்பு, கதீசா அம்மையார் மறைவு
அரிய பெரிய தந்தையராம் அபூத்தாலிப்பு நல்லவரும்
உரிய அன்புத் துணைவியான உயர்ந்த கதீசா அம்மையரும்
விரியும் வையப் பணி எல்லாம் விளக்க மாகப் புரிந்ததன்பின்
தெரியும் வான இறைவன்தன் தேயம் நாடிப் போயினரே! 18
காபிரிகள் கொடுத்த தொல்லை
உதவி யான தோழ ரெல்லாம் உலகை விட்டுப் போனதனால்
முதல்வரான முகம்மதுவும் முழுதும் துன்பம் உறக்கண்டார்
எதையும் புரியும் காபிரிகள் இதனைப் பதமாய் எண்ணியதால்
இதயம் கனிந்த நாயகத்தை இன்னல் செய்து வருத்தினராம்; 19
முகம்மது இல்லத்துக்குள்ளேயே இருத்தல்
அண்ணல் பெருமான் தனிமையினில் அகத்தால் வருந்தி இருந்ததனால்
உண்ணல் உறங்கல் இல்லாமல் ஊரின் வெளியே செல்லாமல்
விண்நல் இறைவன் அல்லாவை வேண்டி வேண்டி எப்போதும்
எண்ணல் இரங்கல் உடையவராய் இல்லத்திற்குள் இருந்தாரே. 20
ஓடும் புலியை எலியும் துரத்தும்
ஓடும் புலியை எலிகூட ஓட்டும் என்னும் பழமொழிபோல்
நாடும் நகரும் பாராமல் நல்ல வீட்டுள் இருப்பவரை
ஆடும் கயமை அபூசகுலின் அழிவைத்தேடும் கூட்டத்தார்
ஏடும் எழுத்தும் பழித்திடவே எழுந்து தொல்லை கொடுத்தாரே. 21
எல்லா இழிசெயலும் செய்தனர்
மண்ணைத் தலையில் போட்டார்கள்; மாசை உணவில் இட்டார்கள்;
கண்ணில் அன்பே இல்லாத கயவர் கல்லால் அடித்தார்கள்;
அண்ணல் இறையைத் தொழும்போதும் அழுகும் முட்டை அடித்தார்கள்;
எண்ண எண்ண இழிவான எல்லாச் செயலும் புரிந்தார்கள். 22
|