எப்போதும் தொல்லை கொடுத்தனர்
தெருவில் வந்து நடந்தாலோர் திருடன் போலப் பகைத்தார்கள்;
பொருவில் லாத அண்ணலையே போக்கி லியைப் போல் பார்த்தார்கள்
வருகை புரியும் ஐயன்கால் வாரி விட்டுச் சிரித்தார்கள்;
இருளில் தட்டி விழுமாறும் எங்கும் குழிகள் பறித்தார்கள். 23
தவற்றை மன்னிப்போம் என்றார்
எவர்தாம் என்ன செய்தாலும் எதற்கும் கலங்கா நபியாரும்
“அவரும் தங்கள் இனத்தாரே; அன்பை இன்று துறந்தாலும்
கவரும்படி நாம் உரைசெய்து கனிவாய் அவரைத் திருத்திடலாம்
தவறு செய்வார்க் குறுதண்டம் தவறே செய்தல்இலை” என்றார். 24
தாயிபு நகரை முகம்மது அடைந்தார்
“ஆரே என்ன செய்தாலும் அரியோன் புகழைப் பரப்புவதே
ஊரில் யானும் செயத்தக்க உயர்ந்த நெறியாம்” எனக்கூறிச்
சீரே உடைய பெருமானார் சிந்தை நலமே உடையவராய்
நேரே தாயிப்(பு) அருநகரை நெருங்கிக் காண விழைந்தாராம் 25
அவர் அவனை அறியவில்லை
கோட்டை சூழ்ந்த தாயிப்பின் குறைசி இபுனு அப்துயாலில்
வீட்டை அடைய அழைத்துப்போய் விரும்பும் படியாய் மொழிபேச
வேட்டை நாய்போல் “அவன்” என்னும் விளக்கம் தன்னை அறியாமல்
கேட்டைச் செய்யும் நெஞ்சத்தான் கெடுதி எண்ணாதுரைத்தாரே. 26
செபுறயீல் கனவில் வந்தார்
வானோர்க்(கு) அரசர் செபுறயீல் வந்தென் கனவின் முன்நின்றே
“தேனார் மொழியே பகர்கின்ற செம்மல் நபிஎன் றெனைவிளித்து
வானார் இறைவன் திருக்குர் ஆன் வாய்மை உரையே எனத்தந்தும்
போனார் வானத் தூருக்கே போன நாளை மறவாமல்; 27
கலிமா ஓதிச் சிறப்படைகின்றார்
உலகும் ஊரும் உய்திபெற உண்மை இசுலாம் நெறிதன்னைப்
பலரும் பெற்றுக் கடைத்தேறப் பதமாய் எடுத்துச் சொல்லுகிறேன்
களரில் வீழ்ந்து கலங்காதோர் கலிமா ஓதிச் சிறக்கின்றார்
புலரும் அன்னார் வாழ்க்கையினில் புன்மை கலவாது ஆகையினால்; 28
|