பக்கம் எண் :

228துரை-மாலிறையன்

பாங்கு இல்லாதவன் முன் பண்பைப் பேசினார்

ஈங்கும் இசுலாம் நன்னெறியை எவர்க்கும் உணர்த்த வந்தேன் யான்
தாங்கும் பெரியோய் தாங்கள் தாம் தமியே னுக்கே உதவிடுவீர்
ஏங்கும் எளியோர் தமக்கெலாம் இன்ப வழியே காட்டுகெனப்
பாங்கும் பணிவும் இல்லான்முன் பண்பைப் பற்றிப் பேசினரே. 29

பொய்யன் மெய்யன் போல் நடித்தான்

ஐயன் சொன்ன மாமறையின் அருமை அறியாக் குறைசி மகன்
பொய்யன் ஆன போதினிலும் பொய்யை மறைத்த உள்ளத்தால்
“மெய்யாம் மறைநீர் உரைத்தீர்கள் மேன்மை முற்றும் யானறிவேன்
ஐயம் கொள்ளா நல்லோரை அழைத்து வருவேன் இணைத்திடவே! 30

சிறுவர்களை ஏவினான்

இக்கால் உங்கள் மக்காவை எண்ணி உடனே புறப்படுவீர்
தக்கார் தங்கள் நெறியறிவேன் தட்டேன்” என்றே அனுப்பியபின்
அக்கால் தீயர் சில பேரை அறியாச் சிறுவர் பல பேரை
“மக்காள்! வருக” எனக்கூவி மறையோன்பற்றிக் கறைசொன்னான். 31

நானே தடுத்தாலும் விடாமல் அடியுங்கள்

“போகும் ஒருவன்பின் போங்கள் பொய்யன் பித்தன் மனக்கோட்டன்
ஏகும் வழியில் இடைமறித்தே எடுத்துக் கல்லால் அடியுங்கள்
பாகும் தோற்கப் பரிந்திடுவேன் பாவம்! பாவம்! என்றிடுவேன்
நோகும்படியே நொறுக்கிடுங்கள் நொய்யப் பேசுக” என உரைத்தான். 32

வள்ளல் பெருமானை அடித்தனர்

வஞ்சன் உரைத்த வழிமுறை போல் வள்ளல் வழிமேல் நடக்கையிலே
அஞ்சாச் சிறுவர் அருங்கயவர் ஐயன்போன வழிமறித்தார்
பிஞ்சுக் கையால் கல்லெறிந்து பெரியோர் தம்மை அடித்தார்கள்
எஞ்சாக் கயவர் எல்லாரும் எடுத்த தடியால் புடைத்தார்கள்; 33

நெற்றியில் அடித்தார்கள்

கல்லும் கழியும் பட்ட இடம் கன்றி வீங்கிப் பொங்கியதே;
சொல்லும் சொல்லால் செவியெல்லாம் சுரணை அற்று மங்கியதே;
நில்லும் நில்லும் எனக் கூறி நெற்றியின் மேல் அடித்தார்கள்
பல்லும் கூட உடைந்திடவே பக்கம் வந்து வதைத்தார்கள்; 34