பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்229


அப்துயாலில் காப்பவன்போல் நடித்தான்

உறுதியான கல்பட்டே உறுபுண் பெரிதாய் ஆனதனால்
குருதி கொட்டி வெளியேறக் கொடியன் இபுனு அப்துயாலில்
“வருதி! வருதி!” எனக்கூறி வள்ளல் தம்மைக் காப்பவன்போல்
“பொருதி! பொருதி!” எனக் கூறிப் பொல்லார் பக்கம் நின்றானே! 35

செபுறயீல் வருகை புரிந்தார்

ஓடி விழுந்த படியாலும் உடம்பில் வீழ்ந்த அடியாலும்
ஆடிப் போனார் அருங்கோமான் ஆங்கே தோட்டத் துள்ளிருந்தே
நாடி வான வெளி பார்த்தார் நல்ல வானச் செபுறயீல்
தேடி வந்து திருத்தூதர் தெளிவாய்க் காண நின்றேபின்; 36

இறைவன் என்னை அனுப்பினார்

“அல்லா ஆணை வந்தேன் நான் ஐயா சலாமே உரைக்கின்றேன்
எல்லார் தாமும் இழைத்திட்ட இழிவை எல்லாம் பொறுத்தீர்கள்
பொல்லார் புன்மை நீக்கிடவே புகழ்சால் மலைக்குப் பெரியோனை
நல்லார் உமக்கு நலம்செய்ய நாடி அனுப்பி வைத்துள்ளான். 37

மிக்காயீல் வருகை புரிந்தார்

என்று கூறி ஏகிய பின் எவரும் பார்த்து வியக்கின்ற
நன்று செய்யும் மிக்காயீல் நாடி ஆங்கே மண்ணிதன்மேல்
ஒன்றும் மலைகள் கடல் எல்லாம் ஒடுங்கும் படியாய் அதிர்ந்திடவே
வென்று சிறக்கும் பண்புடையார் வீரம் மிக்கார் வந்தாரே. 38

நான் உம்மைக் காக்க வந்தேன்

மலையும் தூக்கும் வலிமையுள வானோர்க் கரசர் மிக்காயீல்
களையும் நலமும் இழந்திருக்கும் கனிவாய் முகத்து முகம்மதுமுன்
முளையும் மலர்மா முகத்தாராய் முன்னே வந்துசலாம் சொல்லி
“நிலையின் இழிந்தோர் செய்தவற்றை நீக்கி உம்மைக் காக்கவந்தேன்” 39