பகைவர் எங்கே உள்ளார்?
பகைத்த வஞ்ச மனத்தார்வாழ்
பக்கம் எதுதான்? கூறிடுவீர்
புகைத்த பொல்லார் அடையாளம்
பொருந்த எனக்குக் காட்டிடுவீர்!
தொகுத்த அன்னார் கூட்டத்தைத்
தூள்தூள் ஆக்கித் தொலைத்திடுவேன்
வகுத்தான் என்னை அனுப்பியவன்
வாளா விடுத்துச் செல்வேனோ?” 40
இறைவன் நெறியைப் பின்பற்றுகின்றேன்
வீரம் கூறி மிக்காயீல் வெம்மை யோடு முகம்மதுவின்
ஈர நெஞ்சின் எதிர் நின்றார் ஏந்தல் எவர் என் றுரைக்காமல்
பாரும் பாரும் மிக்காயீல் பரமன் கூறும் திருக்குர் ஆன்
ஆரும் போற்றி வாழ்கின்றார் அடியேன் பற்ற மறப்பேனோ? 41
எல்லாரும் நல்லவரே
எல்லாம் இறைவன் நெறிப்படியே
ஈங்கே நடக்கக் காண்கின்றோம்
பொல்லார் நல்லார் என்பவெலாம்
பொய்யே எல்லாம் நல்லாரே”
வல்லார் செயல்கள் எதுவேனும்
வல்லான் செய்த செயலேயாம்
இல்லார் உள்ளார் என்ப எலாம்
இறைவன் தந்த வரமன்றோ? 42
உதவி கேட்டால் வந்து செய்யுங்கள்
“அறியா மக்கள் செய்கின்ற
அழிவைக் கூடப் பொறுப்பதுதான்
நெறியாம்” என்று நிறைமகனார்
நேரில் கூறி அவரையும்நல்
நெறியார் ஆக்கி “ஐயாவே!
நெடியேன் வேண்டின் நன்மையெலாம்
புரிவான் வருக” எனக்கூறிப்
போக்கி விட்டார் நல்லோரே. 43
|