பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்231


மிக்காயீல் நீங்கிப் போனார்

முகம்மது நபியார் தங்கள் முன்னத்தை அறிந்த பின்பே
அகமது மகிழ்ந்தா ராக அவ்விடம் விட்டுப் போனார்
‘தகதக’ எனவே மின்னும் தகுதியார் மிக்கா யீலே;
நகைமுக நபியார் அந்த நல்லிடம் இருந்த போதில்; 44

இரபியா மைந்தர் நபியின் பசி போக்கினார்

தோட்டத்தில் தொலைவில் உள்ள தூயராம் ரபீஆ மைந்தர்
நாட்டத்தில் உயர்ந்தாரான நல்லவர் உதுபா - சைபா
வாட்டத்தில் இருந்த கோமான் வருத்திடும் பசியை எண்ணி
ஊட்டிடும் உள்ளம் கொண்டார் உடன் தங்கள் ஏவ லாளன்; 45

அவருக்குக் கனிகள் கொண்டு போய்க் கொடு

அத்தாசை அழைத்துத் தட்டில் அருங்கனிக் குலைகள் வைத்தே
“ஒத்தாசை செய்போ” என்றே உளத்தன்பால் அனுப்பி வைத்தார்;
முத்துஆசை கொள்ளும் அன்பு முகத்தொளி கொண்ட அல்லாப்
பித்தாசை கொண்ட அண்ணல் பெரும்பசி நீக்கு தற்கே! 46

பழத்தட்டைக் கொண்டு போய் வைத்தான்

தலைவர்கள் தட்டில் வைத்துத் தந்தசீர்க் கனியை ஏந்தி
நிலையினில் தாழ்ந்த அத்தாசு அரியாரை நெருங்கிப் போனான்
கலைஎழில் குறையாத் திங்கள் கவின்முக நபியார் முன்னர்க்
குலைகுலைக் கனியின் தட்டைக் குனிந்துமுன் தாழ்ந்து வைத்தான். 47

நபி பெருமான் கனிகளை உண்டார்

கனி வைத்த அத்தா(சு) அன்பன் கவின்முகக் கவர்ச்சி கண்டு
பனி வைத்த செஞ்சொல் நல்லார் பணிவைத்தன் அணியாய்க் கொண்டான்
நனிவைத்த சுவைத்தீங் கன்னல் நாணிடக் கனிகள் தந்தான்
இனிவைத்த கனிகள் உண்போம் என எண்ணி உண்ணுங்காலை; 48

இறைவனை வணங்கினார்

அருள்நிறை யாளன் என்றும் அன்புடை யாளன் வானத்
திருநிறை அல்லா பேரால் திகழ்கனி உண்பேன் என்றும்
பொருள்நிறை பிசுமில் ஓதிப் பொருந்திய நிலை அமர்ந்து
பெருமகனாரும் தின்றார் பிழையிலான் அருகி ருந்தான்; 49