பக்கம் எண் :

232துரை-மாலிறையன்

உன் ஊர் எது? பேர் எது?

தின்றனர் தீர்ந்த பின்பு தெளிந்துநின் றானைப் பார்த்து
நன்றுணர் தம்பி! பேர்சொல் நல்லூரும் எதுவோ? என்றார்;
ஒன்றிய மனத்தன் அத்தா(சு)ஒள்ளியோய், “என்பேர் அத்தா(சு)
ஒன்றி நான் வாழ்ந்த ஊரோ நீனவா என்னும் ஊரே!” 50

நான் ரபியா வீட்டின் பணியாளன்

“நாசரேத்து என்னும் ஊரின் நபிகளார் ஈசா சொன்ன
மாசிலா நெறியைப் பற்றி வாழ்பவன்; ரபீஆ வீட்டில்
காசிலாப் பணியாளாகக் காலமே கழிக்கின்றேன் யான்
வீசொளி முகத்தீர்!” என்றான் வித்தகர் இதனைக் கேட்டே; 51

யூனூசு நபியார் வாழ்ந்த ஊரோ?

“ஈடிலாத் திருக்குர் ஆனில் இலங்குவோர் இருபத் தைந்து
மாடுலாம் நபிகள் அந்த மாண்புளார்க் குள் யூனூசு
பீடுள நபியே ஆவார் பெருமன அத்தா(சு) அச்சீர்
நாடுளான்” என்று கூறி நாடியே அதனைச் சொன்னார். 52

நீவிர் யூனூசு அவர்களை எவ்வாறு அறிவீர்?

“அண்ணலார் எந்த நாளோ ஆங்கு வாழ்ந் திருந்த நல்ல
பண்ணுளார் யூனூ(சு) அன்பைப் பகர்ந்தனர் அறிந்திருந்தார்;
மண்ணுளார் மறந்த போதும் மறவாமல் அவரைச் சொன்னீர்
அண்ணலே ஐயன் தன்னை அறிந்தவாறு எங்ஙன்?” என்றான். 53

யானும் நபி அவரும் நபி

“அண்ணலும் நபியே யானும் அவ்வணம் நபியே ஆயின்
அண்ணனும் தம்பி யாவோம் அங்ஙனம் நபிகள் எல்லாம்
மண்ணினில் உடன் பிறந்தோர் மாண்பினைக் காட்டுகின்றோம்
தண்ணிய நபிஅன் னாரின் தன்மையை அறிவேன்” என்றார். 54

அத்தாசு நம்பிக்கை கொண்டான்

சொல்லிய சுடரின் மேலோர் சொல்லினை உற்று நோக்கி
நல்லியல் பெறும் அத்தாசு நல்லவர் நபியே என்றும்
தொல்லியல் மரபி னாரின் தூய்மையை எண்ணியும் பின்
புல்லினான் நல்லோர் சொன்ன புகழ்நெறி ஈமான் கொண்டே; 55

அத்தாசு கலிமா ஓதி இசுலாம் நெறியைப் பின்பற்றினான்

கொஞ்சமே நேரம் செல்லக் கொள்கையில் மாறி னானின்
நெஞ்சமே அறிந்த பின்னர் நெடியவன் ரபிஆ மக்கள்
“வஞ்சமே புரிந்த மக்கா மகம்மது வலையில் மாட்டி
நஞ்சிலே கலந்தான்” என்றே நவின்றனர் வெறுப்பினாலே! 56