பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்233


தோழர்கள் நடுவில் நபியார்

கற்றவர் சூழ்ந்து வாழும் கவின்அகம் நகுலா ஊராம்
அற்றவர் ஆங்கே இல்லை அனைவரும் செல்வர் ஆனார்;
முற்றிய தோழர் சூழ முகம்மது நபியார் ஆங்கே
நற்றிறம் மிக்க சோலை நடுவிலே அமர்ந்திருந்தார்; 57

தாமரையும் குவளையும் மயங்கின

கோமகன் முகத்தை நோக்கிக் குவளைகள் கண்ணால் பார்க்கத்
தாமரை அதனைப் பார்த்துத் தவித்ததும் எதனால் என்றால்
காமர்செங் கதிரோன் இன்னும் கரந்திலன் குவளைப்பூவோ
மாமணித் திங்கள் என்று மயங்கிற் றீங்கு என நினைத்தே! 58

இபுலீசு என்பான் தீயன்

பொய்மையின் உருவம்; வெய்ய பொறாமையின் தோற்றம்; எந்த
மெய்மையும் அறியாத் தீயன் மேன்மையில் கயவன் வாழ்வில்
செய்வன யாவும் ஏய்க்கும் செயல்செய்யும் மனிதன் பொய்மைத்
தெய்வமே வணங்கி வாழ்ந்தான் திருட்டினில் வல்லான்தானே! 59

மனத்தினிலே இருளே கொண்டான்

கொலையினைக் கலையாய்க் கற்றான்; கோட்சொல்லில் பயிற்சி யுற்றான்;
நிலையினில் தாழ்ந்த புல்லன்; நேர்மையோ சிறிதும் இல்லான்
புலையினில் வல்லன் கெட்ட போதையில் கெட்டிக் காரன்
மலைஎனத் தோள்கள் கொண்டான் மனமெலாம் இருளே கொண்டான். 60

இறைவனின் ஆணையை மீறியவன்

வேந்தனாம் இறைவன் ஆணை மீறிய காரணத்தால்
மாந்தர்கள் தோன்று முன்னே மண்ணிலே தோன்றி விட்டான்
போந்த இம் மண்ணில் சில்லோர் போற்றிடப் பலரும் தூற்றும்
மாந்தன் பேர் இபுலீ சென்றே மதித்தவர் அழைத்திட்டாரே! 61