பக்கம் எண் :

234துரை-மாலிறையன்

சின்களின் நிலை

மண்ணிலே மாந்த வாழ்க்கை மலர்ந்திடும் முன்அந் நாளில்
விண்ணிறை நெருப்பினாலே வேண்டியே படைத்த சின்கள்
பண்ணிய பேராசையால் பணிவிலா முறையால் மண்ணில்
மன்னிட வேண்டா வென்று மாய்த்தனன் அதற்குப் பின்பே; 62

சில சின்களை இறைவன் விட்டு வைத்தான்

மனிதரைப் படைத்தான்; அந்த மாண்பிலாச் சின்கள் தம்முள்
இனிதெனக் கண்டோ, வைத்த இரக்கத்தினாலோ, நல்ல
பணிசெயக் சிலவற்றையே பரிவுடன் விட்டு வைத்தான்
தனிஇன மாக இந்தத் தரையிலே இருப்பதற்கே! 63

சின்களை இபுலீசு வசப்படுத்திக் கொண்டான்

இத்தகு சின்கள் தம்மை இபுலீசு சின்இனத்தான்
எத்தீய செயலும் செய்ய ஏற்றவாய் மாற்றி வைத்து
முத்தொளி முகத்தி னாராம் முகம்மது வாழி டத்தை
நத்தி முன் அறிக” என்றே நாற்றிசை அனுப்பி வைத்தான். 64

சின்கள் நபியாரைக் கண்டன

திசைதொறும் சென்ற சின்கள் திரிந்தன திரிந்த வற்றுள்
இசைந்த ஒன்பது சின்மட்டும் இனிதாக அரபு நாட்டின்
மிசைவர நகுலா மண்ணில் மேவுநள் ளிரவுப் போதில்
இசையவர் நபியார் ஆங்கே இருப்பதைக் கண்ட வாமே! 65

சின்கள் வியந்தன

“நள்ளிர வான போதும் நடுவிலோர் சூரியன் இங்(கு)
ஒள்ளிய தன்மை பெற்றே உற்றதும் எங்ஙன்” என்றே
உள்ளின வாகி அந்த ஒன்பது சின்கள் சென்று
வெள்ளிய நபியார் முன்னம் வேடிக்கை பார்த்த வாமே! 66

நோன்பு செய்த ஒன்பது சின்கள்

தோற்றமும் பொலிவும் அன்பு துலங்கிடும் ஒளியும் இன்ப
நாற்றமே கமழும் தெய்வ நாட்டமும் அருள் பெருக்கின்
ஊற்றமும் ஒருங்கே தோன்ற ஒன்பது சின்கள் தாமே
நோற்றநன் னிலையை எண்ணி நோக்கியே வியந்திருக்க; 67