நபிபெருமான் செயல்களைக் கண்டன
மறைவிடம் தனிமைநாடி மண்ணின் மேல் மண்டி இட்டு
நிறைபெருங் கனிவு மிக்க நேரியோன் அருளை வேண்டி
முறையிடும் உரையும் சொல்லும் முகம்மது நாவில் தோன்றும்
முறையினைக் கண்ட சின்கள் முனைப்புடன் நயந்து கேட்க; 68
இவரே நபி
இறையவன் அனுப்பி வைத்த இனியவர் இவர்தாம்; போற்றும்
மறையவர் இவர்தாம்; தூதர் மணிநபி இவர்தாம்; ஓதும்
நிறைமொழி திருக்குர் ஆன்தான் நெடுநாள்நாம் தேடும் ஆட்சி
முறைமகன் இவர்தாம் என்றே மொழிந்தன தமக்குள் தாமே; 69
இதுவரை அறியாமல் போனோமே
முத்தினை ஒத்த மேனி முகம்மது தம்மைக் கண்டோம்
“இத்தனை சிறப்பி னாரை இதுவரை அறிகிலோமே
எத்தனை தவறு செய்தோம்?” என மிக வருந்திக் கூறி
அத்தனின் முன்னே சின்கள் அமைதியாய் இருந்த வாங்கே! 70
வாழ்வை வீணாக்கி விட்டோமே
“மெய்ம்மையைக் கண்டோம் இன்றே மேன்மையைக் கண்டோம்
பொல்லாப்
பொய்மையில் மூழ்கி வாழ்ந்தோம் புவியுளே பாவி ஆனோம்
ஐவகை மாபா வத்தை அகத்தினால் செய்தோ னுக்குச்
செய்வன எல்லாம் செய்யச் சிறுமையே சிந்தித் தோமே!” 71
எங்கள் இனத்தார்க்குச் சொல்வோம்
என்றவை எண்ணி ஐயன் இனியநன் முகத்தை நோக்கி
“நன்றுறத் தெளிந்தோம் இந்த நாள்முதல் ஐய! நாங்கள்
ஒன்றினோம் தங்க ளோடே உறுபுகழ் முசுலீம் ஆனோம்;
சென்று நாம் இனத்தார்க் கெல்லாம் செப்புவோம் இதனை” என்றே 72
மற்ற சின்கள் வந்தன
விரைந்தன இனத்தைச் சேர்ந்து விளம்பின யாவும் சின்கள்
நிரைந்தன வாகி உள்ளம் நெகிழ்ந்தன “இப்போதேயாம்
விரைந்தனம்” என்று கூறி விழைந்தன குளிர்ந்த பூவின்
விரைகமழ் நபியார் தம்மை விழிகளால் காணுதற்கே! 73
|