பக்கம் எண் :

236துரை-மாலிறையன்

நகுலா நீங்கி மக்காவுக்குப் போனார்

தங்கிய நகுலா நீங்கித் தனிப்புகழ் மக்கா வுக்கும்
பொங்கிய மகிழ்ச்சியாலே புண்ணிய வானோர் சூழ
மங்கிய விண்மீன் கூட்டம் மாண்பெழில் நடுவண் தோன்றும்
திங்களைப் போலச் சென்றார் திருப்பொலி தூதர் தாமே! 74

ஒரு சின் தூது போயிற்று

கூட்டமாய் வந்த சின்கள் கோதிலார் தம்மைக் காண
நாட்டமாய்த் தேர்ந்து ஓர் சின்னை நயமுடன் தூதனுப்ப
ஓட்டமாய் ஓடித் தூதும் ஒளியினார் முன்னே செல்ல
வாட்டமாய் மற்றைச் சின்கள் மக்காமுன் இருந்த வாமே! 75

நபியே வருக

“எண்ணிலாச் சின்கள் யாங்கள் ஏந்தல்உம் அருளை வேண்டிக்
கண்ணிலார் கருத்திலார்போல் கலங்கியே உள்ளோம் ஈங்கே!
வெண்ணிலா முகத்தோய்! தாங்கள் விரைந்திங்கு வருக” என்றே
புண்ணியம்செய்த சின்னும் போய்அவர் முன்வேண்டிற்றே! 76

சின்களிடம் நபிகள் நாயகம்

வேண்டிய சின்னின் வேண்டல் விழுமியோர் உளத்தை ஈர்க்க
ஈண்டிய சின்கள் தம்மை இருகணால் காணுதற்கு
நீண்டதம் ஆர்வம் கொண்டே நெடுங்குடை நீழல் கீழே
மாண்ட பூக் கமழும் வண்ணம் மண்ணடி படாமல் வந்தார்; 77

நபியே சான்று காட்டுக

நாடிய நபிப்பெம் மானை நயந்துசின் கூட்டம் கண்டு
நீடிய நபியார் என்று நேர் வரும் தங்கள் மாண்பைக்
கூடிய நாங்கள் நம்பும் கொள்கையில் செய்து காட்டும்
பீடியல் சான்றினாலே பெருமையே அடைவோம்” என்ன; 78

என்ன சான்று வேண்டும்?

கேட்டனர் பெருமான் உம்முன் கேடிலாச் சான்று தன்னைக்
காட்டுவேன் நீங்கள் எந்தக் கருத்தினில் கேட்டீர்? வாழும்
நாட்டிலே உள்ள புட்கள் நன்மரம் விலங்கு இவற்றுள்
காட்டிட எதனைக் கேட்டீர்? கருத்தினைச் சொல்க” என்றார். 79