|
மரம் பேசினால் ...
கருத்தினை உணர்ந்த சின்கள் கனிவுடன் மரங்கள் காட்டித்
திருத்தகை யோரே! ஆங்குத் திகழ்மரம் ஒன்றைத் தங்கள்
விருப்பினால் அழைக்க அஃது வியன்சான்று வழங்குமானால்
மறுப்பிலை உடனே மூல மந்திரம் மொழிவோம்” ஈங்கே; 80
மரம் பேசிற்று
என்றசின் விருப்பம் தன்னை இதயத்தில் கொண்ட நல்லோர்
நின்றஓர் வஞ்சி என்னும் நெடுமரம் தனை அழைத்தார்;
நன்றென அம்மரந்தான் நலமுடன் வேர் எழும்பிச்
சென்றவர் பக்கம் நின்று சிறப்புடன் கிளைகள் தாழ்த்தி; 81
நீரே இறைவன் தூதர்
மூலமந்திரத்தை அன்னார் முன்னமே எழுதிக் காட்டக்
”கோலமா மரமே நான்யார் கூறுக” என்ற போழ்தில்
ஒலமாய்க் குரலெடுத்தே “ஓங்கிய நபியே! நீர்தாம்
மேலவர்” என்று சொன்ன மேன்மையைச் சின்கள் கேட்டே; 82
சின்கள் கலிமா ஓதின
“நலம் நலம் நாங்கள் கேட்ட நற்சான்றும் கிடைத்த திங்கே;
வலம் வரக் கிடைத்த எங்கள் வாய்மையின் அரசே! உம்மை
நிலமெலாம் போற்றும் யார்க்கும் நிழலென வருகை தந்தீர்;
குலத்தினில் சின்கள் நாங்கள் கூட்டமாய்க் கலிமா சொல்வோம்;” 83
சின்கள் கனிந்தன
என்றவை பெருமான் கால்கள் இணையினை முத்த மிட்டுச்
சென்றவை சென்று மீண்டும் சிறப்புற வணங்கிக் கொண்டு
நின்றவை எல்லாம் கூடி நெடுமூல மந்திரத்தை
ஒன்றவே சொல்லிச் சொல்லி உவப்புறக் கனிந்த வாமே! 84
மரம் சென்றது
“நின்ற தாம் மரத்தைப் பார்த்து நெடியநல் மரமே! நீ போய்ச்
சென்றுமுன் போல நிற்பாய் செம்மை யாய்” என்று கூற
நன்றுசெய் மரமும் சென்று நல்லிடம் நின்று கொள்ள
ஒன்றிய சின்கள் எல்லாம் ஒருங்குடன் முன்னர் வந்தே; 85
|