நன்றாகப் பாதுகாப்போம்
பாலொடு சோறு கூட்டிப் பக்குவ மாகஊட்டிக்
காலொடு கைகள் ஆட்டிக் கலைநிலா வருகைகாட்டிச்
சேலொடு பிறழும் கண்கள் சிறப்புற மையும் தீட்டி
மேல்ஒளிர் ஆடை மாற்றி மேனியைக் குளியல் ஆட்டி; 11
வீரம் உடையவர்களாக ஆக்குவோம்
நீள்புனல் முளரிப் பூப்போல் நெடுமுகம் மலரச் செய்து
கோளரி மாவைப் போலக் கொழுவிய உடல தாக்கி
நாளெலாம் அறிவை ஊட்டி நல்குவோம் உம்சேய் தம்மை
ஆளவும் வலிய ராக்கி அளித்திட வல்லோம்” என்றார். 12
எல்லாப் பெண்களும் குழந்தைகள் பெற்றுச் சென்றனர்
பக்குவ உரையி னாலே பாறையும் உடையும் என்பார்
இக்கனி உரைக்கொப் பாக இயம்பிய மகளிர் எல்லாம்
மக்காவின் செல்வர் வீட்டு மழலைச் சேய் வாங்கிக் கொண்டு
மிக்கதாம் ஆர்வத் தோடு மேவினார் தங்கள் ஊரே. 13
பூனைபோல் வந்தவர் முயல்போல் சென்றனர்
வெயில்பட்ட பயிர்போல் வந்தோர் விண்மழை பட்டார் போலக்
கையில் பெறும் சேய்க ளோடு களிப்புடன் போன காட்சி
அயல்வரும் பூனை போல அமைதியாய் வந்த மக்கள்
முயல்என மகிழ்ந்து துள்ளி முன்போன நிலைஆ யிற்றே. 14
ஒருத்திக்கு மட்டும் குழந்தை கிடைக்கவில்லை
கூலிக்குப் பால்கொடுக்கும் கூட்டத்துப் பெண்கள் எல்லாம்
மேலுக்குஓர் சேயைத் தூக்கி மிகுமகிழ் வுற்றுப் போகக்
காலுக்கு வலியே தோன்றக் கவின்மக்கா தெருவில் எல்லாம்
பாலுக்குக் குழந்தை கேட்டுப் பதறினாள் ஒருத்தி மட்டும்; 15
|