பக்கம் எண் :

24துரை-மாலிறையன்

அலிமாவும் ஆரிதுவும்

வற்றிய மார்பும் காண வருந்திய முகமும் வேர்வை
நெற்றியில் சுருக்கம் தானும் நெஞ்சினில் ஏமாற்றத்தின்
பெற்றியும் நிரம்பப் பெற்றுப் பின்வரும் ஆரிது அன்பு
முற்றிய கணவ ரோடும் முன்போனார் அலிமா வாரே! 16

இவரை நம்பி எப்படிக் குழந்தையைக் கொடுப்பது?

அலிமாவின் தோற்றம் தன்னை அருவருப் பாகக் கண்டே
புலிமாபோல் வளர்த்தஎங்கள் பொன்மெய்ச்சேய் தன்னைத் தந்தால்
எலியைப் போல் ஆக்கி வைத்தே எம்மிடம் தருவாள் என்றே
மலிவாய்ச் சொல் தமையே பேசி மதிப்பின்றித் துரத்தினாரே! 17

இறுதியில் முகம்மது வாழும் தெருவில் போனார்

ஊரெலாம் சுற்றிச் சுற்றி உணர்வெலாம் மழுங்கி நாவில்
நீரெலாம் வற்றிக் காக்கும் நிழல் எலாம் இழந்தார் போல
ஆரெலாம் கண்டும் போற்றா அலிமாவும் வருந்திக் கொண்டே
காரெலாம் குழுமித் தோன்றும் கருணையார் தெருவில் போனார்; 18

இறைவன் எளியவர்க்கே அருள் சுரப்பவன்

எளியார்க்கே அருள் சுரக்கும் ஏந்தலார் அருளே தோன்றி
ஒளியார்நல் நெஞ்சத்தார்க்கே உயர்வழி காட்ட எண்ணி
வெளியார்கள் யாரும் மேவா வியன்சிறு தெருவில் போனார்
அளியார்க்கும் அளியார் ஆன அலிமாதம் கணவ ரோடே; 19

அப்துல் முத்தலிப்பு வீட்டின் முன் போனார்

வறுமையின் கோலத் தோடும் வளமான நெஞ்சத் தோடும்
இறுதியும் முதலும் இல்லா இறைவனின் துணையினோடும்
உறுதியாம் உள்ளத் தோடும் உயர்அப்துல் முத்தலிப்பின்
பெறுநலத் தில்லத் தின்முன் பிழையில்லார் போய் நின்றாரே! 20

ஆரம்மா நீ? எங்கே வந்தாய்?

வெயில்முன்நின் றாரைப் போல வெளியிலே நின்றார் தம்மைப்
பெயல்மழை முகில்போல் சூழும் பேரப்துல் முத்தலிப்பு
நயமிகும் நெஞ்சத்தோடு நாடியே அருகில் வந்து
“பயன்பெற வந்துள் ளீரோ பகருக நீர் யார்?” என்றார். 21