குழந்தை தந்தால் பாலூட்டிக் காப்போம்
“ஐயனே! குனைன்நல் ஊர்வாழ் அரும்பனீ சாது என்கின்ற
செய்யதாம் குலத்தைச் சார்ந்தோர் செய்பணி அற்ற ஏழை
உய்யவே கணவர் ஆரி(து) உடன்வந்தேன் அலிமா என்பேர்;
கையிலோர் குழந்தை தந்தால் காப்பதெம் கடமை” என்றார். 22
எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கும்
“தேவையை அறிந்து விண்ணோர் தேடியே வந்தார்” என்றும்
யாவையும் கேட்ட நல்லார் ‘ஆவதும் அவனால்’ என்றும்
பாவையை மணாளர் தம்மைப் பரிவுடன் நோக்கி, “நீங்கள்
தேவைதான்” என்று கூறித் தெரிவித்த செய்தி ஒன்றே; 23
போய்க் குழந்தையைப் பாருங்கள்
“தாங்குவார் இல்லா எத்தீம் தாயவர் ஈன்ற சேயை
ஈங்குநீர் எடுத்துச் செல்ல இசைந்தவர் ஆயின் சென்றே
ஆங்குள குழந்தையைக் கண்டு அறிவிப்பீர் முடிவை” என்னப்
பாங்குடன் ஆமினா சேய் பார்க்கவே விரைந்து போனார். 24
தாயே! குழந்தையை நாங்கள் பாதுகாக்கலாமா?
பாலூட்டி வளர்க்க வந்த பரிவினார் அலிமா அன்னை
சூலுற்றுப் பெற்றெடுத்த சுடர்அன்னை ஆமினாவின்
பால்உற்றுத் “தாயே! தாங்கள் பரிவுற்றுப் பெற்ற சேயைப்
பாலூட்டி வளர்த்துக் காக்கும் பண்பு எமக்கு உண்டா?” என்றார். 25
தந்தை இல்லாக் குழந்தை இதுவாகும்
அனைத்துமே வல்லா னாலே ஆவதாம் என்று தேர்ந்து
“நினைத்து நீர் வந்த தெல்லாம் நேரிதே; ஆனால் அம்மா!
தினைத்துளிப் பொருளும் இல்லை; திகழ்துணைத் தந்தை இல்லை;
பனைத்துயர் தீர்த்துக் காக்கப் பரிவுடன் ஒருவர் இல்லை; 26
நன்றாகச் சிந்தித்தபின் கூறுங்கள்
வறுமையுள் வறுமை சேர்ந்தால் வாழ்வதும் அருமை ஆகும்
உரிமையாய் வந்து கேட்டீர் உரைப்பதென் கடமை யாகும்
பெருமையாய்த் தர ஒன்றில்லை பிள்ளையைத் தவிர; நீவிர்
அருமையாய் எண்ணிப்பின்னே ஆவன புரிக” என்றார்; 27
|