கணவர் ஆரிதோடு கலந்து பேசுதல்
அம்மாவின் வாய்மை கேட்ட அம்மாதும் வெளியே வந்து
செம்மாந்தர் ஆரி தோடு செப்பிய யாவும் கூறத்
“தம்மாலே எதுவும் இல்லை தலைவனின் விளையாட்”டென்றே
அம்மாண்புக் கணவர் கூற அரியோரும் வீட்டுள் போனார்; 28
என்னே அருமையான குழந்தையிது!
வீட்டுளே சென்ற வர்க்கு விளைவன சொலவா வேண்டும்?
“காட்டுக சேயை” என்றார்; கைம்மலர் தாங்கி வந்து
நீட்டிய உடனே சேயின் நெடு முக ஒளியினாலே
பூட்டிய நெஞ்சப் பூவில் பொலிவுதான் தோன்றக் கண்டார்; 29
கண்டதும் பேரின்பம் கொண்டார்
கண்டதும் வறுமை எல்லாம் கலைந்தது போல ஆனார்
கொண்டதும் கையில் அன்புக்கொல்லையில் புகுதல் போன்றார்
தொண்டினால் தூய உள்ளம் தோன்றுதல் போல் பொலிந்தார்
கண்டபேரின்பத் தார்போல் களித்தனர் இளைத்தபேரே! 30
இது இறைவனின் கட்டளை என்றார் ஆரிது
“நல்லவை நடக்கும் இங்கு நடப்பன எல்லாம் அந்த
வல்லவன் ஆணை யாலே வாய்ப்பன தீமை தானும்
உள்ளவை என்றால் கூட ஒளியவன் செயலே” என்றார்
வல்லவர் ஆரி தென்னும் வளமையார் மனைவியார்க்கே! 31
குழந்தையைக் கையில் ஏந்தியவுடன் புத்துணர்ச்சி தோன்றியது
சேயினைக் கையில் வாங்கிச் செவ்விதழ் முத்தம் வைத்து
நோயெலாம் நீங்கப் பெற்று நுண்ணொளி தன்னில் மூழ்கி
ஆயநல் லுணர்வில் ஆழ்ந்தே ஆண்டவன் அருளைப்பூண்டு
தாயவர் அலிமா தங்கள் தனிநலம் பெருகக் கண்டார். 32
பால் கொப்புளித்துச் சுரந்தது
கொப்புளித் தெழுந்த பாலைக் கொஞ்சியே குழந்தைக் கூட்டி
அப்புறத் திருந்த தங்கள் அன்புச்சேய் தனக்கும் ஊட்டி
எப்புறத் திருந்த பேரும் எண்ணியே வியக்க அத்தாய்
இப்புறத் திருந்து கொண்டே அப்புறத் துலகைக் கண்டார். 33
|