ஆமினா வீட்டில் தங்கினர்
அன்பர்கள் இரண்டு பேரும் ஆமினா வீட்டில் தங்கித்
துன்பமும் துயரும் தீர்ந்து தொடர்ந்த மெய்ந் நலமும் பெற்றார்;
இன்பமே உருவாய் வந்த எழில்முகம் மதுவினாலே
மன்புகழ் ஓங்கி நின்றார் மங்கையார் அலிமா தாமே. 34
குனைன் சிற்றூர்க்குச் செல்ல முற்பட்டனர்
மகம்மது குழந்தை யோடும் மக்காவை விட்டு நீங்கி
அகமிகும் குனைன் நல்லூரை அடைந்திடஎண்ணம் கொண்டு
தகைமிகும் அன்னையார்க்கும் தலைவர் முத்தலிப்பினுக்கும்
வகையாக எடுத்துக்கூறி வருந்தினார் அலிமா நல்லார்; 35
ஆகட்டும் போய் வாருங்கள்
புகுந்த ஊர் மக்கா அன்பு பொலிந்த ஊர் குனைன் நல்லூரே
தகுந்த நாள் வந்த போது தங்களூர் போதல் தானே
மிகுந்த சீர் மகிழ்வுண்டாக்கல் மேதினி இயற்கை என்றே
அகந்தனில் வருந்தினாலும் “ஆகட்டும்” எனவே கூறி; 36
ஆமினா பின்வருவன உரைத்தார்
மறுக்கவும் மனமில் லாமல் மக்காவில் அவர்கள் தாமே
இருக்கவும் வழியில்லாமல் இருவழி தனிலும் உள்ளம்
வருத்திட யாவும் வான வளத்தவன் செயலே என்று
பொறுத்தனர் ஆகிப் பின்னர்ப் புகன்றனர் ஆமினாவே! 37
குறையில்லாமல் காப்பாற்றுக
“இறையவன் அருளால் பெற்ற இனியதிக் குழந்தை அம்மா
முறையுடன் காக்க உன்னை முனைவனும் அனுப்பி உள்ளான்;
மறைபுகழ் முகம்மதுக்கு மகிழ்வுறப் பணிகள் செய்து; எக்
குறையுமே இல்லா வண்ணம் கொண்டுபோய் வளர்க்க வேண்டும்.; 38
மண்ணை மேல் நிலைநிறுத்த வந்த சேய்
தரையினில் தவழும் சேயைத் தனியிடம் விட்டி டாதீர்
நிறையிலா மனிதர் தம்பால் நேர்வைத்து விலகிடாதீர்
விரைவினில் வளர்த்து மண்ணை மேல்நிலை நிறுத்துதற்குக்
கறையின்றி இச்சேய் தன்னைக் கருத்தொடு காத்தல் வேண்டும்; 39
|