பக்கம் எண் :

28துரை-மாலிறையன்

மனிதர் பெருமையைக் காப்பாற்றுக

நானுனக் கிவற்றை எல்லாம் நவிலுதல் தேவை இல்லை;
தேனுனக் களித்தான் வானத் தேவனே! ஆகையால் நீ
வானுளோற் குரிய நன்றி வழங்குதல் ஒப்ப தாக
மானுடர் பெருமைக் கேற்ற வகையிலே வளர்க்க” என்றே; 40

ஆமினா கண் கலங்கினார்

உயிரையே எடுத்துக் கையில் ஒப்படைத் திடுவார் போல
மயிலவர் அலிமா வோடும் மாண்பினார் ஆரிதோடும்
வியன்முகம் மதுச்சீர் சேயை விருப்புடன் அனுப்பி வைத்துக்
கயல்விழி வெந்நீர் சோரக் கலங்கினார் ஆமினாவே! 41

புறப்படுமுன் ககுபத்துல்லா போனார்கள்

அரியாரை ஏந்திச் சென்ற அலிமாவும் கணவ னாரும்
“விரிஒளிக் ககுபத் துல்லா வேண்டிப்பின் செல்வோம்” என்று
வருகையில் இறைஇல்லத்தின் வாய்த்ததென் கிழக்கு மூலைக்
கருங்கலாம் கசுறுல் அசுவத்(து) அருமையாய் நடந்து வந்த; 42

உருவச் சிலைகள் புரண்டு வீழ்ந்தன

காட்சியை அலிமா கண்டு கையினால் வணங்கித் தொட்டு
மாட்சியாம் ஆலயத்தை மதிப்புடன் சுற்றி வந்தார்
ஆட்சிசெய் ஆலயத்துள் ஆம் குபல் சிலைகள் எல்லாம்
மாட்சியை இழந்து வீழ்ந்து மண்ணினில் புரண்ட வாமே; 43

குழந்தை சென்ற இடமெல்லாம் வளமை ஓங்கிற்று

சேயினைத் தூக்கிச் செல்லும் சீரிடம் எல்லாம் மக்கள்
வாயினைப் பிளக்கு மாறு வளமைகள் செழிக்கக் கண்டார்;
நோயினைப் பெற்றவர்கள் நொடியினில் நலத்தைக் கொண்டார்;
நாயினைப் போன்றார் கூட நல்லெழில் மான்போல் போனார்; 44

வறுமை தொலைந்தது

குழந்தைமுன் வந்த வர்க்கோ கொடும்பசி தோன்றவில்லை
இழந்துபோய் விட்ட தெல்லாம் எய்தினர் மகிழ்ச்சி கொண்டார்;
தொழுந்தகை யாள ராகித் தோன்றிய பகையும் நீங்கி
எழுந்தவர் எல்லாம் சேயின் எழில்தாளை முத்த மிட்டார்; 45