குனைன் சிற்றூர் தனிப்பெருமை கொண்டது
சிற்றூரின் தெருவில் எல்லாம் சிரிப்பொலி; வறுமை யாவும்
அற்றூரின் பெருமை எண்ணி அயலூரில் பேசி னார்கள்;
கற்றோரின் கல்வி மேன்மைக் கலைகளும் பெருகி அவ்வூர்ச்
சிற்றூராய் இன்றில் லாமல் செழுந்தனி ஊரா யிற்றே. 46
பசுமை வளம் செழித்தது
கால்பட்ட இடங்கள் எல்லாம் கனிபட்ட மரமாய்ச் சேய்வாய்ப்
பால்பட்ட இடங்கள் எல்லாம் பசுமையின் செழிப்பாய்த் தாயின்
சூல்பட்டு வளர்ந்த கோமான் சுடர்பட்ட இடங்கள் மாட்சி
மேல்பட்டுச் சிறக்கக் கண்டார் மேவினார் ஆங்கண் வந்தே! 47
இன்ப வெள்ளம் பொங்கிற்று
எங்கெங்கும் வளமை ஊரின் இடமெங்கும் செழுமை ஓங்க
அங்குள்ள மக்கள் வாழ்வில் அரியமுன் னேற்றம் தோன்ற
வெங்குற்றம் எங்கும் அற்று வெற்றிகள் தாம் கொண்டாடப்
பொங்கிற்றே இன்ப வெள்ளம் புனிதச் சேய் வளர்ச்சியாலே! 48
குழந்தை தவழ்ந்தது
கவிழ்ந்த சேய் தவழ்ந்து செல்லக் கனிந்தது தலையைத் தூக்கி
அவிழ்மலர் நறுமுல்லையின் அரும்புபோல் இரண்டு பற்கள்
குவிஇதழ்ச் சிரிப்புக் காட்டிக் குளிர்ந்தசெங்கைகள் நீட்டி
அவிர்ஒளித் திங்கள் தன்னை அழைத்தது மகிழ்ச்சியாலே! 49
முட்டிக்கால் போட்டது நடந்தது
முட்டிக்கால் போட்டுச் சேய்தான் முன்னேறி நிமிர்ந்து உட்கார்ந்து
தட்டிக்கை கொட்டிக் காட்டிச் சப்பாணிப் பருவம் காட்டிச்
ஒட்டிக் கையூன்றி நின்று ஒருகால் வைத்திருகால் வைத்தும்
எட்டிக்கால் முன்னே வைத்தும் எழிலாக நடந்த தாங்கே. 50
மழலைச் சொல் பேசியது
மழலைச் சொல்பேசிக் கேட்டோர் மனத்தினை மயங்கச்செய்து
குழலிசை யாழிசையைக் கொண்டுபோய்க் கடைநிறுத்தி
அழுகையோ சிறிதும் இன்றி ஆர்க்கும் ஒட்டாரம் இன்றி
விழுமிய குழந்தையாக விளங்கிற்று வானச் சேயே! 51
|