பக்கம் எண் :

30துரை-மாலிறையன்

ஊரெல்லாம் கத்தூரி மணம்

ஆண்டிரண் டாகிச் சேய்தான் அலிமாவின் இல்லம் தன்னில்
நீண்டொளி பரப்ப மெய்மேல் நிழல்முகில் தாவிச் செல்ல
வேண்டுமெய்ம் மான் மதத்தின் மிகுமணம் பரப்ப ஊரின்
பூண்டுபுல் எல்லாம் அன்னார் புகழ்மணம் பெற்ற வாமே! 52

ஆமினாவை நினைத்தனர்

பாலினை மறக்கச் செய்து பக்குவம் உற்ற பிள்ளை
பால்இணையில்லா அன்பைப் பாய்ச்சிய அலிமா அன்னை
சூலினை உற்றுப் பெற்ற சுடர்ஒளி ஆமி னாவின்
மேலுறும் நினைவு கொண்டு மேவினர் குழந்தையோடே; 53

குழந்தையைக் கண்டு ஆமினா மகிழ்தல்

பழந்தனை ஏந்திக் கொள்ளும் பசித்தவர் நிலையைப் போலக்
குழந்தையைக் கண்ட போது கொள்ளைகொள் இன்பம் கொண்டும்
அழுந்தவே முத்தம் தந்தும் அன்புடன் அணைத்துக் கொண்டும்
பொழுது போவதும் தோன்றாமல் பொலிந்தனர் ஆமினாவே! 54

பிள்ளையால் பெருமை பெற்றோம் அம்மா

பிள்ளையால் தாங்கள் பெற்ற பெருமைகள் எல்லாம் சொன்னார்;
கொள்ளையாய் வான் பேரின்பம் கொண்ட தம் நிலைமை சொன்னார்;
வள்ளலாய் வந்தார் எங்கள் வாழ்வெலாம் நிறைந்த தென்றார்;
உள்ளமே உயர்ந்தோம் எங்கள் ஊரினர் எல்லாம் என்றார்; 55

எட்டுத் திங்கள் தங்கி மீண்டனர்

மக்காவில் எட்டுத் திங்கள் மலர்ச்சியோடி ருந்து விட்டுத்
தக்காராம் ஆமினாவின் தகுமனை விட்டு நீங்கி
இக்காலம் குனைன்நல் லூர்க்கே ஏகலாம் என்று கூறிப்
புக்கனர் அலிமா தங்கள் புகழ்முகம்மதுவி னோடே! 56

***