பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்31


3. முத்திரை இட்ட படலம்

முகம்மது நான்கு வயது குழந்தை ஆனார்

அருள்மகனால் பொருள்மிகவும் பெற்றுயர்ந்த

அலிமாவின் குடும்பத் தார்கள்

இருள்முகமே இல்லாமல் எழில்முகமே

கொண்டவராய் இயங்குங் காலை

ஒருமுகமாய்க் குடும்பத்தில் இருப்பவர்கள்

அன்பெல்லாம் ஊட்ட ஊட்டத்

திருமுகத்து முகம்மதுவும் திகழ்வயது

நான்காகச் சிறக்கக் கொண்டார். 1

அண்ணன்மார்கள் எங்கே அம்மா?

எங்கெங்கும் பசுமைவளம் நிறைந்துநிலம்

செழித்திருக்கும் இனிதோர் நாளில்

செங்கனிநேர் முகமுடைய சீர்வழங்கும்

கையுடைய செம்மல் ஆன

நங்கவினார் முகம்மதுதம் அருள்தாயாம்

அலிமாவை நாடிச் சென்று

“எங்கம்மா என்னன்பின் அண்ணன்மார்?

கூறு”கெனும் இசையாழ் மீட்டார்; 2

அப்துல்லாவும் லமுறத்தும் ஆடுகள் மேய்க்கப் போயினர்

பொய்தவிர்த்த நெஞ்சுடைய புகழ் அலிமா

“புனிதமுறு புதல்வ! கேளாய்

மெய் உளத்தான் அப்துல்லா லமுறத்தும்

கால்நடைகள் மேய்ப்ப தற்குச்

செய்வளத்துக் கானகமே சென்றுள்ளார்

திரும்பிஉடன் சேர்வார்” என்றே

செய்வளர்த்த போல் வளர்த்த அன்புத்தாய் அலிமாவும்

செப்பிடவே செம்மல் கேட்டார்: 3