பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்239


முகம்மது முதியவரைக் காணுதல்

புனிதமுறு நன்மக்கா நகருக் குள்ளே

புகழ்த் தோழர் புடைசூழ அமர்ந்த நல்லார்

இனிதாகக் கருத்துரைகள் இயம்பிக் கொண்டே

இறைவன்சீர்ப் பணியொன்றே செய்து வந்தார்;

தனிஒருவன் முதியவனாய்த் தளர்ச்சி உற்றுத்

தள்ளாடித் தள்ளாடி நபிமுன் வந்தான்.

பனிவழங்கு சொல்லாரோ அவனைப் பார்த்துப்

பக்கத்தில் வந்தமரச் செய்த பின்னர்; 91

முதியோர் வணங்கி உரைத்தல்

முதியவரே! யார்நீவிர்? கலங்கு கின்றீர்!

முன்வந்து காரணத்தை மொழிவீராயின்

எதுகுறையே என்றாலும் தீர்த்து வைப்பேன்”

என ஆங்கே அருள்முதல்வன் தூதர் கேட்க;

அதுவரையில் அமைதியாக இருந்த மாந்தன்

அகம்மதுவை நோக்கிஉடன் பேச லுற்றான்;

“புதுமலர்போல் முகத்தவரே! சலாம் சொல் கின்றேன்

புகலுவதைக் கேட்டெனக்கே அருள்வீர்” என்றான்; 92

இவன் மனிதனாக இருக்க இயலாது

கண்ணிரண்டும் பஞ்சடைந்து கால் தள்ளாடிக்

காதிரண்டும் அடைபட்டு மெய்யும் வாடி

எண்ணிறந்த துன்பத்தால் இங்கே வந்தோன்

எதிரினிலே மனிதன்போல் தோன்றினாலும்

மண்ணிறங்கி வந்திருக்கும் சூமன் என்று

மனத்தாலே எண்ணுகிறேன் எனவே எண்ணி

பண்ணிறைந்த மொழிகொண்ட அன்பு வள்ளல்

“பதறாமல் மொழிந்திடுவீர்” என்று சொன்னார். 93