பக்கம் எண் :

240துரை-மாலிறையன்

மன்னன் இபுலீசு நிலை

பொன்னுலகம் போற்றுகிற அண்ணல் கோமான்

புதுமைகள் செய்வதிலே வல்லர் ஆவார்

மன்னவர்முன் பொய்யுரைத்தால் அறிந்து கொள்வார்

மறைக்காமல் மெய்யுரைப்பேன் என நினைத்துத்

தன்னிலையை ஐயன்முன் எடுத்து வைத்தான்

“தகவுடையீர்! முன்னாளில் இபுலீசு என்னும்

புன்னிலையன் புகழில்லான் ஆட்சி செய்தான்

“புவியுலகும் விண்ணுலகும் தனக்கே” என்றான். 94

மன்னன் இலாக்கீசு நிலை

நல்லவரை அலைக்கழித்தான்; பேரா சையால்

நன்மைகளைத் தீயிலிட்டான்; அத்த கையோன்

உள்ளவரை தீமையன்றி நன்மை இல்லை;

ஒருவாறு நீங்கியபின் அவன்தன் மைந்தன்

சொல்லவரை யறைஇல்லாத் தீயன் ஆவான்

சூட்டியபேர் இலாக்கீசு நெஞ்சும் மாசு

“கொல்லவரைக் குத்தவரை”என்றே சொல்வான்

கொடுமைக்கோர் உருவாகத் திரிந்த பொல்லான்; 95

மன்னன் காயிம் நிலையும் காம்மாவும்

இன்னவரின் குடிவந்த காயிம் என்பான்

இவரைஎலாம் மிஞ்சுகிற கொடுமை வல்லான்

அன்னவனின் மகனேயான் “காம்மா” என்பேர்

அருந்தந்தைக் கோர்மகனாய் ஆட்சி பெற்றேன்

என்னைஎவர் எதிர்த்தாலும் வெற்றி கண்டேன்

எனக்குநிகர் இல்லைஎன இறுமாப்புற்றேன்;

என்னுடைய முன்னோர்நெஞ்சு இருண்ட வாறே

என்னுளமும் இருண்டதனால் கொடுமை செய்தேன்; 96