பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்241


தீயவனாய் இருந்தேன்

செருக்குடைய வனாய்இருந்தேன் சிறுமை செய்தேன்;

சிற்றறிவால் நல்லவரை அடிமை செய்தேன்;

தருக்குடைய வனாய்த் திரிந்தேன் தன்மை யற்றுத்

தரக்குறைவி னால்மகிழ்ந்தேன் உண்மை மீதில்

வெறுப்புடைய வனாய் அலைந்தேன் அன்பைக் கொல்லும்

விருப்புடையவனாய் ஒழிந்தேன் உள்ளம் எல்லாம்

கருப்புடைய வனாய் அழிந்தேன் வாழ்நாள் எல்லாம்

கறைஉடையவனாய்க் கழித்தேன் ஐய! கேளீர்! 97

ஒருவர் வந்தார் வலிமை குன்றினேன்

தீச்செயலே புரிந்து வரும் நாளில் என்றன்

தேயத்தில் என்முன்னே ஒருவர் வந்தார்

ஈச்சிறகைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்க்கும்

இயல்பினிலே என்னிதயம் ஒடுங்கக் கண்டேன்

மூச்சுவிடும் போதவரின் வெப்பக் காற்றால்

முயல்ஒன்று புலிமுன்னர்ப் போல நின்றேன்;

கூச்சலிடக் கூடஎன் நாக் கூடவில்லை

குறுகிஅவர் முன்நின்றேன் எல்லாம் தோற்றேன்; 98

கட்டைவிரல் இரண்டையும் கட்டிவிட்டார்

என்கால்கள் இரண்டினையும் ஒன்றாய்க் கூட்டி

இரண்டுபெரு விரல்களையும் சேர்த்துக் கட்டி

“வன் கால்கள் இப்படியே இருக்க” என்று

வாய்விட்டுக் கூறித் தம்வழியே சென்றார்.

பின்கால்கள் இரண்டினையும் பிரிக்கப் பார்த்தேன்

பெருமுயற்சி செய்தாலும் இயல வில்லை

புன்கால்கள் நிலைகண்ட பலரும் வந்து

புரிசெயலா லும் பிரிக்க இயலவில்லை. 99