பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்243


முகம்மது நபியிடம் வேண்டினார்

“மக்காவில் பிறந்தவரே! இறைவன் தன்சீர்

மதிப்புக்கே உரியவரே! தோன்றும் இந்தப்

பொற்காலம் எனக்கென்றே வாழ்ந்து வந்தேன்

புகழ்க்கோவின் திருக்குர்ஆன் பொலிந்த வாழ்வே!

இக்காலம் கண்ணிணையால் கண்டு கொண்டேன்

இசுலாத்தின் நெறிகாட்டி வைப்பீர்! இன்னே

இக்காலைப் பிரித்தளித்துக் காக்க வேண்டும்

எனக்காலில் விழுந்தெழுந்து கேட்டான் காம்மா. 103

கட்டியவரை அடையாளம் கட்டு

கனிந்தவனாய்ப் பேசுகிறாய் காம்மா உன்றன்

கால்களையார் பிணித்தவர்சொல்? என்றார் கோமான்;

பணிந்தபடி இருந்தவனாம் காம்மா, “ஐயா

பாதத்தில் இப்படியே கட்டுப் போட்ட

மனித மகன் தனைஎங்கும் தேடித் தேடி

மயங்கினனே அல்லாமல் கண்டேன் அல்லேன்

கனிதவழும் இயல்முகத்தீர் கண்டேன் ஆயின்

காட்டிடுவேன் “அடையாளம்” என்றான் ஆங்கே. 104

அபூத்தாலிப்பு மகனார் அலீயை அழைத்தார்

காம்மாவின் சொல் கேட்ட அன்புக் கோமான்

கருத்தாலே யாவினையும் கண்டறிந்து

நாம் மாற்றிக் காம்மாவின் துன்பம் தீர்ப்போம்

“நடந்தேபோய் அபூத்தாலிப்பு ஈன்ற நற்சீர்

ஆம் மைந்தர் அலீதம்மை இவ்விடத்தில்

அழைத்திடுக” எனக்கூறக் கேட்ட நல்லோர்

தாம் மதித்து விரைந்தார்கள் சிறிது போதில்

தக்கவராம் அலீதம்மை அழைத்து வந்தார். 105