பக்கம் எண் :

244துரை-மாலிறையன்

இவரே என் கால்களைக் கட்டியவர்

அதிர்நடையார் அலீஅவர்கள் வருகை தந்தார்

அவர்தம்மைக் காம்மாவும் கண்ட பின்னே

விதிர்விதிர்த்து வாய்குழறிப் பதறிக் கைகால்

வெலவெலத்து நடுநடுங்கி அவரைக் காட்டி

“எதிர்வந்தார் இவரேதாம் என்றன் காலின்

இருவிரல்கள் பிணித்தவரே” என்று கூறிக்

கதிரின்முன் ஓர்புல்லைப் போலச் சாய்ந்து

கால்பற்றிக் கண்ணீரே உகுத்து வீழ்ந்தான்; 106

அலீ அவர்கள் கட்டினை அவிழ்த்தார்

“கலங்காதே காம்மா உன் கட்டு நீக்கும்

காளையரும் இவர்தாமே இமைக்கும் போழ்தில்

நலங்காணப் போகின்றாய்” என்று கூறி

“நல்லவர்கள் போற்றுகிற அலீயே! நீவிர்

புலன்காண இம்முதியார் காலின் கட்டைப்

போக்கிடுக” எனச் சொன்னார் அந்தப் போதே

நிலங்காணல் போல் காம்மா காலைக் கண்டார்

நெருங்கியகால் கட்டுப்பட் டெனப் போயிற்றே! 107

காம்மா கலிமா ஓதிமுசுலிம் ஆனார்

கட்டதுவும் அறுபட்ட காம்மா நெஞ்சக்

கருத்ததனில் நன்மைகளே முற்றக் கொண்டான்

பட்டதுவும் பணிந்ததுவும் எல்லாம் எண்ணிப்

பகைத்ததுவும் பழித்ததுவும் மாற்றிக் கொண்டு

கெட்டதுவும் கெடுத்ததுவும் எண்ணி எண்ணிக்

கேட்டதையே அருள்செய்யும் கோமான் காலில்

ஒட்டுறவாய் வீழ்ந்ததன்பின் முசுலிம் ஆகி

ஒளியவனாம் அல்லாவின் புகழ் சொன்னானே! 108