பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்245


அனைவரையும் நபிபெருமான் வரவேற்றார்

உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி

உவப்பாக விருந்துண்ண வேண்டுமென்று

நறவுபொழி மலர்மனத்தார் அலீயை நோக்கி

நவின்றதனைக் கேட்டவரும் விரைந்து சென்று

“மறைத் தலைவர் விருந்தளிக்க அழைக்கின் றார்கள்

மனமகிழ்ந்து வருக” வென அழைத்து வந்தார்

நிறைமக்கள் பற்பலரும் நெருங்கிச் சூழ

நெஞ்சுவந்து பெருமகனார் வரவேற் றாரே! 109

பலரும் விருந்துண்ண வந்தனர்

அறிவுடையார் அன்புடையார் நெஞ்சத்துள்ளே

அருளுடையார் பொருளுடையார் அமைதியான

செறிவுடையார் சிறப்புடையார் செம்மை வாழ்வுச்

சீருடையார் பேருடையார் நபியைப் போற்றும்

நெறியுடையார் நேர்மையொடும் அமைதி உள்ளம்

நெருங்கிய ஊர்ச் சான்றோர்கள் மற்றும் நல்ல

குறிக்கோளும் உடையநல் அன்பர் வந்தார்

கோமகனார் தருகின்ற விருந்துண்ணற்கே! 110

நாற்பது பேர் வந்தனர்

வற்றாத அன்புரையால் பணிவு காட்டி

வறியரொடும் சிறியவர்கள் பெரியோர் பெண்கள்

கற்றவர்கள் முதலாய் நாற்பத்துப் பேர்கள்

கருத்தோடும் விருந்துண்ண வந்திருந்தார்

பற்றாலே அன்னவரை எல்லாம் அண்ணல்

“பரிவுடனே விருந்துண்ண வருவீர்” என்றார்.

நற்புலத்துச் சிறுவர்களே முற்றத் தின்னும்

நலமுடையோர் எனில் மற்றோர்க் குரைக்கலாமோ? 111