பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்249


இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்தார்

ஒளிசெய் அருள்வாய் உரைமொழியும் ஓதும் இசுலாம் மறைநெறியும்
அளியார் ஆன அசுஅதுளம் அருகில் இருந்த அன்பருளம்
உளிபோல் செதுக்க உண்மைஒளி உடையாராக நலம்கொண்டு
வெளிவான் இறைவன் ஒருவனெனும் விளக்கம் அறிந்து பொலிந்தாரே.5

தொழுகை கற்றார்

தொழவும் கற்றார்; தூயநெறி தொடரக் கற்றார்; கலிமாவே
விழையக் கற்றார் நபியாரால் விளக்கம் பெற்ற நல்லோர்கள்
செழுமை உற்றோம்; இனிநாங்கள் சிறந்தோம்சிறந்தோம் வாழ்வெல்லாம்
வழுவில் லாமல் மதினாவை வளர்த்தல் உறுதி” எனக்கூறி 6

மறை ஓத ஒருவரை எம்முடன் அனுப்புக

சொல்லும் சொல்லைப் பிறிதோர்சொல் துளியும் வெல்ல முடியாமல்
சொல்ல வேண்டும் என்பதில்தான் சொல்லின் பெருமை உளதன்றோ?
நல்லீர்! நாங்கள் மதீனாவில் நாளும் இசுலாம் நெறிபேணச்
சொல்லில் வலிமை உடையாரைச் சுட்டி எம்மோடு அனுப்பு”கென்றார். 7

முசு அபுவை அனுப்பி வைத்தார்

மதீனத் தாரின் மனக்கொள்கை மதித்த கோமான், மாமறையை
மதிக்கும் நெஞ்ச மாண்புடைய மாந்த ரான முசுஅபுவே
பதியும் வண்ணம் அருமறையைப் பகர வல்லார் எனஅன்பை
விதைக்கச் செல்க” என்றவுடன் வீரர் எழுந்து புறப்பட்டார் 8

முசுஅபுவும் அசுஅதுவும் சோலையில் தனியே தொழுதனர்

மக்கா மண்ணின் மலர்ப்பொலிவை மதினா மக்கள் காண்பதுபோல்
மிக்கார் சூழ்ந்து முசுஅபுவின் மேன்மை உரையைக் கேட்டார்கள்
அக்கால் ஒருநாள் அசுஅதுவும் அருஞ்சொல் நெறியார் முசுஅபுவும்
புக்கார் சோலை நலம் துய்த்துப் பொலிந்தார் இறைமுன் தொழுகையிலே!9

சகுது என்பவன் புதுமையான தொழுகையைக் கண்டான்

ஆங்கே வந்த சகுதென்பான் அரியோர் இருவர் புரிகின்ற
பாங்கே உடைய தொழுகையினைப் பார்த்து வியந்து, மதீனாவில்
தீங்கே வரத்தான் போகிறது திசையைப் பார்த்துத் தொழுகின்றார்
ஈங்கே உள்ள மரபுகளை இவர்கள் அழிப்பார்” என்றெண்ணி; 10