சகுது-உசைதுவிடம் கூறினான்
தலைவன் உசைது தன்னிடம் போய்த் “தலைவா! தலைவா! இது கேளாய்!
சிலையை வணங்கும் முறைமாற்றிச் செப்பும் புதிய நெறிமுறையால்
மலைந்து மக்கா மக்கள்எலாம் மனத்தில் அமைதி இழந்தார்கள்
குலையச் செய்ய மதினாவில் கூட்டி வந்தார் முசுஅபுவை; 11
முள்செடியை முதிர்ச்சி அடையும்முன் கொல்ல வேண்டும்
இதனை நாமும் இப்போதே எதிர்த்துத் தாக்கிச் சிதைக்கிலமேல்
புதிய இந்த நெறியதனால் பொல்லாங் கெல்லாம் உருவாகும்
பதியும் முன்பே முள்செடியைப் பறிக்கா விட்டால் முதிர்வடைந்து
சிதைக்கும் நந்தம் கைஎன்றே செப்பும் உரைமெய் யாம்அன்றோ? 12
புதுநெறி புகல்வாரைக் கொல்ல வேண்டும்.
பகர்ந்த சகுது மேன்மேலும் பகையே மிகஉ சைதுவிடம்
“மிகுந்த புகழ்கொள் நம்நெறியை மீறும் வேற்று நெறியாரை
வகிர்ந்து போட்டுக் கொன்றிடவே வருந்தேன் என்றன் உடன்பிறந்தான்
தகும்அசுஅதையும் முசுஅபையும் தாக்கிக் கொல்க” எனச்சொன்னான். 13
உசைது சினந்து உடன் எழுந்தான்
அடித்த பந்து மேலெழும்பும் அத்தன் மையான் உசைதுவுடன்
கடித்த பல்செங் கண்ணோடும் கனிந்தோர் இருவர் முன்சென்று
பிடித்த கத்தி பளபளக்கப் பிதற்று நாவும் சலசலக்க
இடித்த இடிபோல் சொல்முழங்கி இரைந்து நல்லோர்முன்நின்றான். 14
நின்றால் கொன்று விடுவேன்
சினத்தைப் பொருளாய்க் கொண்டவனாய்ச் சீறி நிற்கும் உசைது ஆங்கே
மனத்தை இறைமேல் வைத்தவரை மாய்க்கும் வகைகண்டு உரையாற்றி
“இனத்தின் பெருமை அழிக்கத்தான் ஈங்கே நீவிர் வந்துள்ளீர்
நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது நின்றீர் என்றால் கொன்றிடுவேன்;” 15
சினக்க வேண்டாம் சொல்வதைக் கேட்பீர்
“ஓடிப் போங்கள்” எனக் கூறும் உசைது சினத்தைக்கண்டவுடன்
நாடி நன்மை தீமையினை நவிலும் நல்லார் முசுஅபுவும்
பீடு மிகுந்த ஊர்த்தலைவா! பெரியோய் உம்முன்சிலசொற்கள்
கேடில்லாமல் சொல்கின்றேன் கேட்பீர் அதன்பின் உம்மாணை. 16
|