| 
       
      முசுஅபு எடுத்து விளக்கினார்
       
      
      எனைத் தென்றாலும் ஏற்றிடுவோம் இசைவே அளிப்பீர்” எனச்சொன்னார். 
      நினைவால் தூய நிலையுற்ற நெருக்க வந்த உரவோனும் 
      வினைநல் லார்முன் விருப்பமுடன் வீற்றிருக்க முசுஅபுதம் 
      கனிவா யாலே கடவுள்மொழி கருத்தைஎடுத்து விளக்கினரே!		17
       
      
      திருக்குர்ஆன் கேட்டு உசைது மனம் மாறியது
       
      
      தோண்டத் தோண்டச் சுரக்கின்ற தூயகேணி நீர்போல 
      நீண்ட மாண்ட திருக்குர்ஆன் நிகழ்த்த நிகழ்த்த உசைதுமனம் 
      ஆண்ட தீமை அகம்பாவம் அடியோ டெல்லாத் தீக்குணம்போய் 
      மாண்ட நல்ல மனத்தினனாய் மலர்ந்தான் குளிர்ந்து மகிழ்ந்தானே!		18
       
      
      ஆ! ஆ! என் மனம் திருந்தியது
       
      
      செருக்கும் சினமும் சிறுமையதும் சேரா மல்நான் பெருக்கமுற 
      நெருக்க மாக நல்லூழ்தான் நிலைபேரின்பம் அளித்ததுபோல் 
      திருக்குர்ஆனை அருள்வித்த தெய்வச்சீரை என்னென்பேன் 
      உருக்கமாய்என் புன்னெஞ்சில் உறைக்குமாறு சொன்னீரே.			19
       
      
      பிறந்த பயனைப் பெற்றேன்
       
      
      மறுக்க லாகாப் பேருண்மை மானு டத்தை வளர்ப்பதற்குத் 
      திருக்குர் ஆனே இஃதன்றித் தேடி னாலும் வேறுண்டோ? 
      கறுப்பு நெஞ்சின் கலக்கத்தைக் கனிந்த உரைதான் மாற்றியதே 
      பிறப்புப் பயனை யான் பெற்றேன் பேரின்பத்தின் நலம் துய்த்தேன்”	20
       
      
      இன்னும் ஒருவன் இருக்கின்றான்
       
      
      என்று கூறி மாண்உசைதும் இசுலாம் நெறியின் புகழ்போற்றி 
      ஒன்றி விட்ட உளத்தினராய் “ஒன்றே உரைப்பேன்இது கேளீர்! 
      மன்றம் போற்றும் மதிப்புடைய மனிதன் ஒருவன் இருக்கின்றான் 
      என்றும் என்றன் சொல்தட்டா எண்ணம் உடையான் அறிவுடையான்;	21
       
      
      அவன்பேர் சகுது-மதினாவில் உள்ளான்
       
      
      தகுதி மிக்கான் மதீனாவின் தலைமை யோருள் அவன்ஒருவன் 
      சகுது நற்பேர் கொண்டவனைச் சந்தித் தும்பால் அனுப்பிடுவேன் 
      மிகுசீர் தெய்வத் திருக்குர்ஆன் மேன்மை எடுத்துப் புகன்றிடுவீர் 
      அகத்தில் தெளிவை உண்டாக்கி அரிய “கலிமா” உரைத்திடுவீர்;		22 
       
    |