பக்கம் எண் :

252துரை-மாலிறையன்

உசைது மாறி வருகின்றாரே

இவ்வா றெல்லாம் சொல்லியவர் இதயம் தெளிந்த நிலையோடும்
ஒவ்வா மனத்தான் சகுதுஇருக்கும் ஓரில் லத்தை நெருங்கிவரத்
“செவ்வான் போலச் சென்றஇவர் நீல்வான் போல வருகின்றார்
அவ்வாறாயின் ஆங்கின்னார் ஆற்றல் இழந்து விட்டவரே” 23

அவர்கள் வஞ்சம் இல்லாதவர்கள்

நெஞ்சால் சகுது இதை எண்ணி நெருங்கி வந்த உசைதுவிடம்
“அஞ்சா தார்போல் சென்றீரே ஆங்கே என்ன நடந்ததென
எஞ்சா தீங்கே உரைக்க” என்றார் இனியார் உசைது ”நல்லாய்கேள்
வஞ்சம் இல்லார் இருவர்தம் வாய்மை ஒன்றே யான் கண்டேன்; 24

திருக்குர்ஆன் கேட்டுத் தெளிந்தேன்

அன்னார் கூறும் திருக்குர்ஆன் அரிய மறைபோல் வேறில்லை
சொன்னார் கேட்டேன் உட்பொருளைச் சுவைத்தேன் கனிந்தேன் உடன்வந்தேன்
ஒன்னார் சிலர்உன் அண்ணாரை ஒழிக்க வந்தார் எனஅறிந்தேன்
முன்னால் வந்தேன் சொல” என்றார் முழுதும் உசைது சொலும் முன்னே; 25

சகுது கொதித்து எழுந்தார்

“பகைவர் எதிர்த்து வந்தாரா? பார்ப்பேன் ஒருகை” எனக்கூறி
வகையாய்க் கத்தி வலத்தேந்தி “வாங்கி விடுவேன் உயிர்” என்றே
புகைத்து நகைத்து அவருள்ள பூங்கா தன்னை நாடியதும்
பகைவர் இல்லா இருவோரும் பக்கம் இருக்கக் கண்டனரே! 26

சகுதுவிடம் இருவரும் பேசினர்

“இருவர் நீங்கள் இருக்கின்றீர்; இனியும் ஈங்கே இருப்பீரேல்
உருவம் சிதையத் தாக்கிடுவேன் உயிரை விடுவீர்” எனக்கூறிப்
புருவம் நெறித்த சகுதுவிடம் புதுமை படைக்க வந்தோர்கள்
திருவார் பெருமை இறைபோற்றிச் செப்பினார்கள் இவ்வுரையே! 27

நாங்கள் சொல்வதைக் கேட்பீர்

“குறிப்பால் உணர்ந்து கொள்கின்ற குற்றம் இல்லாப் பெரியீரே!
அரிக்கும் சினத்தைத் தணித்திங்கே அமர்ந்து கேட்பீர்; அதன்பின்னர்
விரிக்கும் உங்கள் நெறிப்படியே வினைகள் செய்வீர்” எனக்கூறி
எரிக்கும் சினத்தை நகைமொழியாம் இனிய நீரால் அணைத்தனரே. 28