உண்மை துலங்கியது
அமைதி நெஞ்சில் ஏறிவிட அன்புத் தவிசில் அமர்ந்திருக்க
இமைகள் மூடி இறைவன்சீர் இயம்பி அன்பு முசுஅபுவும்
அமைசீர் மறையாம் திருக்குர்ஆன் அரிய கருத்தை ஓதிடவும்
சுமையார் நெஞ்சில் தோன்றியதோர் சுடர்போல் உண்மை துலங்கியதே!29
இன்றே பேரின்பம் அடைந்தேன்
ஆ! ஆ! அருமை அருமை இது ஆர்க்கும் கிட்டாப்பெருமை இது
பாகார் மொழியும் பயன்நெறியும் பாதை வகுத்துச் சொல்முறையும்
நோகா வாழ்வு தான் பெறவே நுவலும் நல்ல வழிமுறையும்;
ஆகார் இதற்கும் ஆருள்ளார்? அடைந்தேன் இன்றே பேரின்பம்; 30
என்னை இறைவன் மாண்பு காத்தது
“ஈமான் கொண்டேன் இசுலாத்தில் இணைந்தேன்” என்று கலிமாவை
நாமாண் புறவே நயந்துரைத்து நல்லோர் ஆன அச் “சகுது”
ஆம்மாண் பிழந்து நல்லவரை அழிக்கத் துணிந்த கொடியேன் யான்
ஏமாந்திருப்பேன் என்றாலும் இறைமாண் பென்னைக் காத்த”தென; 31
அன்பால் பிறரைக் கலிமா ஓதச் செய்வேன்
இயம்பி வல்லோர் புகழ்கூறி இல்லம் சேர்ந்தார் அச்சகுது
நயமும் அன்பும் கலந்தஉரை நல்கி விருந்தும் உண்பித்தே
“இயலும் வகையில் எல்லாம்நான் இசுலாம் நெறியைப் பிறர்க்குணர்த்தி
அயலா ரெல்லாம் கலிமாவின் அன்பர் ஆக்க முயன்றிடுவேன்; 32
நிலத்தைப் புனிதப்படுத்துவேன்
“குலத்தைச் சேர்ந்த நல்லாரின் கொள்கை மாற்றி நலம்செய்வேன்
நிலத்தைப் புனிதம் ஆக்கிடுவேன் நெடிய நல்லார் முகம்மதுவின்
உளத்தை உணர்ந்து கொண்டதனால் உவகை கொண்டேன்” எனக்கூறிக்
குலத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து நலம் சொன்னார். 33
என்னைப் பின்பற்றுங்கள்
என்னைத் தலைவன் என நீங்கள் எண்ணல் உண்மை ஆமாயின்
மன்னர் நல்லார் முகம்மதுவின் மணிசேர் வாய்மைநெறிபோற்றி
இன்னல் நீங்கி வாழ்க என இசைந்த சகுது சொல்கேட்டார்
அன்னவாறே இசுலாத்தில் அன்பால் மாறிச் செழித்தனரே. 34
|