“கச்சு” பயணம் மேற்கொண்டனர்
நனி புகழ் மிகுந்த வள்ளல் நபிப்பட்டம் பெற்ற பின்னர்
இனிதெனப் பதின்மூன் றாண்டும் ஏகமுன் னாண்டைப் போலப்
புனிதநாள் ஆகும் கச்சு பொன்விழா காணுதற்குக்
கனிமுகப் பெண்கள் ஆண்கள் கலந்தவர் பல்லோர் வந்தார்; 35
மக்காவில் மக்கள் வெள்ளம்
அசுஅதும் உசைதும் சஃதும் ஆகிய நல்லா ரோடும்
இசுலாமின் எழிலார் மாந்தர் இனும்உள்ள மதீன மக்கள்
இசைவுடன் வந்தெல்லாரும் எழில்நகர் மக்கா சூழ்ந்தார்
திசைஎலாம் போற்றுகின்ற திருவிழாக் காணுதற்கே! 36
மதினா மக்கள் அபூத்தாலிப்பின் இல்லம் புகுந்தனர்
பெருவிழாக் கண்ட பின்னர்ப் பிழையிலா நபிநல்லாரை
முருகிய ஆவலோடு முன்சென்று காணுதற்குத்
திருவளர் அபூத்தாலிப்பின் திருமனை புகுந்தார் அன்பே
தருமன மதீனா மக்கள் தங்கள்நல் லினத்தா ரோடே; 37
சிற்றப்பா அப்பாசும் இருந்தார்
எப்பாரும் புகழ வந்த எழில்நபி தமையே ஈன்ற
அப்பாவின் தம்பி யான அப்பாசும் இருக்க ஆங்கே
இப்பாரின் நலனுக்காக இறைவனால் அனுப்பப்பட்டார்
செப்பினார் இதயம் எல்லாம் சிறப்புகள் எய்து தற்கே. 38
அப்பாசு பேசினார்
அரியவர் உரைக்குப் பின்னர் அப்பாசும் ஆங்(கு) எழுந்தே
“உரியசீர் எல்லாம் பெற்றே ஒளிநகர் மதீனா வாழும்
பெரியவர் வந்துள் ளீர்கள் பேணிடும் எங்கள் சேயார்
விரிஒளி விளக்கம் கொண்டார் விழிஎன எங்கட்கு உள்ளார்; 39
|