முகம்மது எங்கள் குலமணி விளக்கு
அவர்சொலும் நெறியை ஒப்பி அகமகிழ் கின்றீர் நீவிர்;
இவர்தனி ஆற்றல் மிக்கோர் இம்மண்ணைப் புரக்க வந்த
தவமிகும் அறிஞர் எங்கள் தகுமனம் வைத்துப் போற்றும்
குவைமணி மாலை எங்கள் குலமணிக் காளை ஆவார்; 40
இன்று முகம்மதுவை மதினாவுக்கு அழைப்பது நன்றே
அன்பொடும் வந்தீர் அன்பால் ஆண்டவன் அருளைப் பெற்றீர்;
முன்பும்நீர் வந்தீர் அன்பு முசுலீமாய் மாற்றம் பெற்றீர்;
இன்றுநீர் ஏந்த லாரை ஏத்திடும் மதீனா ஊரே
நன்றுற அழைக்க எண்ணி நவில்கிறீர் யாவும் நன்றே; 41
அப்பாசு கண் கலங்கினார்
இங்குள அண்ண லார்க்கே ஏதேனும் ஒருதீங் கென்றால்
எங்களுள் ஒருவர் கூட இமைமூடி உறங்க மாட்டோம்
பொங்குவோம் ஆனால் உங்கள் பொன்னகர் தனில்ஓர் தீங்கை
அங்குளார் செய்து விட்டால்; அப்பாசு கலங்கி னாரே! 42
“அல்பறா” பேசினார்
நல்லோர்கள் போற்ற வந்த நறுமண மேனி யாரைப்
புல்லோர்கள் நெருங்கிச் சூழ்ந்தால் பொறுமையாய் இருக்க மாட்டோம்;
எல்லோரும் ஒன்று பட்டே எதிர்த்திடும் பகையைத் தாக்கிக்
கொல்லாமல் அமைய மாட்டோம் கொப்புளித் தோடும் செந்நீர்; 43
எங்கள் மனத்தவிசில் இருத்திக் காப்போம்
இறைவனின் தூதனாரை இரண்டுகண் ணாக வைத்து
முறையுடன் காத்தல் எங்கள் முழுப்பணி இதனின் வேறு
நிறைபணி எங்கட் கில்லை நெடுமொழி உரைக்க வந்த
மறைமணி யேஎம் மன்னர் மனத்தவிசு இருத்திக் காப்போம் 44
கைதம் பேசத் தொடங்கினார்
அன்றியும் தாங்கள் எங்கள் அருகினில் இருக்கும்போது
வென்றியே அடைவோம் அன்றி வெல்லுவார் ஒருவர் இல்லை”
என்று உரை செய்த வல்ல இனியராம் அல்ப றாவை
நன்றென அமர்த்திப் பின்னே நவின்றனர் கைதம் என்பார். 45
|