மக்காவுக்கும் மதினாவுக்கும் பகை இல்லை
மக்கமா மக்க ளுக்கும் மதீனாவின் மக்களுக்கும்
சிக்கலோ பகையோ என்றும் சிறிதுமே வந்த தில்லை
தக்கவர் உமது சொல்லைத் தட்டாமல் ஏற்போம் என்றால்
மிக்கதாம் மனமாற்றத்தால் மேவலாம் பகையே அன்றோ? 46
யார்க்குத் துணை செய்வீர்?
அங்ஙனம் தோன்றும் போரில் ஆர்க்குநீர் துணையாய் ஆவீர்?
தங்களின் குலத்தவர்க்கா? தகுமக்கள் எங்களுக்கா?
அங்கவர்க் குதவி எங்கள் அன்பினை மறந்து விட்டால்
பொங்குவர் அன்றோ எம்மைப் பொருந்திய மதீனா மக்கள்? 47
கள்ளத்தார் எவரானாலும் பொறுக்க மாட்டேன்
உள்ளத்தால் பொய்யா வண்ணம் உரைத்தனன் என்றார் கைதம்
முள்ளைத்தான் நெஞ்சுள் வையார் மொழிந்தனர் இதனை என்ற
வள்ளல்தாம் அன்பைக் கூட்டி வழங்கினார் வாய்மை அந்நாள்
“கள்ளத்தார் எவரானாலும் கருணையை அவர்க்குக் காட்டேன்; 48
நன்னெறி நாடுவோரே உறவு மக்கள்
நன்னெறி நாடு வோரே நாட்டில்நம் உறவு மக்கள்;
புன்னெறி நெஞ்சுள் வைத்துப் புகழ்ந்திடும் வஞ்ச மக்கள்
மின்னலைப் போலத் தோன்றி மேனிலை கெட்டு வீழ்வார்
என்னிலை மாறேன் என்றார் இன்னுமோர் கருத்துச் சொன்னார்; 49
பன்னிரண்டு பேர் முன் வருக
மறைமொழி வழியில் நின்று மனத்தினால் தூய்மை ஆனோர்
நிறைமனத் தாலே ஆய்ந்து நேரிய முடிவெடுத்துக்
கறையிலாப் பன்னிரண்டு கடமையோர் தேர்ந்து கொண்டு
முறையுடன் என்முன் வந்தால் முழுநலம் புரிவேன்” என்றார். 50
|