பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்257


அவ்வாறே வந்தனர்

மன்னவர் உரையைக் கேட்ட மதீனத்தார் விரைந்து சென்று
முன்னமர் அறிவும் வீர முறைமையும் ஒருங்கே பெற்ற
ஒன்பதின் மரோடு மூவர் உயர்கசு ரசுஅவ சைச்சேர்
மன்னிய குலத்து மாந்தர் மகம்மது முன்னர் வந்தனர்; 51

அசுஅது தலைவர் ஆனார்

ஆங்குவந் தவருக் கெல்லாம் அசுஅது தலைவ ராகித்
தாங்கவே வேண்டு மென்ற தகுமொழி நபியார் கூறி
ஈங்குமை எதிர்த்துத் தாக்கும் எளியவர் யாவ ரேனும்
பாங்குடன் ஒன்று பட்டுப் பணிவுடன் நடக்க வேண்டும். 52

தலைவர் ஒருவரின் கீழ் இயங்குக

“இருவரே இருந்தால் கூட எவரேனும் தலைவ ராக
வருவதே பெருமையாகும் வளர்ச்சியும் கட்டுப்பாடும்
தருவதே தலைமை யால்தான் தவறாதீர்” என்று கூறிப்
பெருமானார் மதீனத்தார் முன் பேசிடும் அவ்வேளையில்; 53

வானவர் தோன்றி வாழ்த்தினார்

வானவர் தலைவர் தோன்றி வள்ளலைக் காண வந்தார்
“தீனவர் தோன்றலாரே! தெரிவித்தேன் சலாமே என்றும்
ஆனஇம் மதீன மக்கள் அறிவிக்கும் உறுதி யாலே
தான்இவர் சிறப்பார்” என்றும் சாற்றியே மறைந்து போனார்; 54

மதீனா சென்று மகிழ்ந்து வாழுக

இறையவன் ஆணை ஏற்றே இயம்பிய உறுதி வாங்கி
மறையவர் மகிழ்ந்து, “நீங்கள் மதீனாவை அடைந்து நல்ல
முறையினில் பழகி அன்பை முளைவிடச் செய்க” என்றார்.
நிறைவுற்ற மதீனா மக்கள் நெடியோரை வாழ்த்திச் சென்றார். 55