2. மக்கமாநகர் நீங்கு படலம்
இபுலீசு நிலைமையினை அறிந்தான்
இறையவன்தன் தூதரினை இதயத்தால்
விரும்பியவர் இசுலாம் மாந்தர்
கறைவிலகிக் கனிந்தவராய் அவர்அவர்தம்
இடம்ஏகும் கருத்துக் கொண்டார்;
குறையுடைய மானிடமே குவலயத்தில்
நிலைக்கஎண்ணும் கொள்கை கொண்ட
நிறையில்லா “இபுலீசு” நிலைமைதனை
உடனறிந்து நெருங்கி வந்தே; 1
மதீனத்தார் மயங்கினார் மக்காவினர் உறங்குகின்றீரே
இருட்டுவரும் நிலைகண்டும் விழிக்காமல்
உறக்கத்தில் இருக்கின் றீரே!
திருட்டுமனத் தானான முகம்மதுவின்
திகைப்புரையால் தெளிவு கெட்டுக்
குருட்டுமனம் உடையவராய் மதீனமக்கள்
கொள்கையற்றுக் குலைந்து போனார்
மருட்டுகிற நெறியானை மாய்த்திடாமல்
உறங்குகிற மக்கா மாரே! 2
ககுபாவை முகம்மது இடிக்கப் போகிறான்
புல்லியராம் மதீனாவின் மக்களையே
பொய்யாகப் புகழ்ந்து நாவால்
சொல்லியதை அவர்நம்பி ஏமாந்தார்
முகம்மதுவின் சூழ்ச்சி யாலே
கல்லிதயம் அதுகொண்டு ககுபாவாம்
ஆலயத்தைப் பற்றே இன்றி
வல்லிருகை யால் இடிக்கும் திட்டத்தை
வகுத்துள்ளான்” என்று சொன்னான். 3
|