முகம்மதுவை மக்கா மக்கள் பிடிக்க முயன்றனர்
மதீனாவின் மக்களொடு முகம்மதுவும்
போகின்றார் மதீனா நோக்கி
அதனாலே நம்பெருமை அகலு” மென
அகம் வருந்தி மக்கா மக்கள்
“பதமாகப் பிடித்திடுவோம்” எனக்கூறி
நாற்றிசையின் பக்கம் தேடி
முதலோர்க்கு வலைபோட்டார் முடிவாகச்
கிடைத்தவரோ சகுது தாமே; 7
சகுது தன்னை வதைத்தனர்
கிடைத்தவரைக் கயிறதனால் கட்டிவைத்துக்
கெடுமனத்தார் கீழ்மேல் தாக்கி
அடித்தவரைத் துன்புறுத்தி ஆகாத
படிவருத்த ஆங்கண் வந்த
நெடியவர்கள் சுபைறுவும் ஆரிதுவும்
கொடுந்துன்ப நிலைமை கண்டு
“கொடியவரே! வன்னெருப்புக் கொள்ளியினால்
தலைசொறிந்து கொண்டீர்” என்றார். 8
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
“முற்பகலில் இதுசெய்து தீவினையே
விதைக்கின்றீர்; முழுதும் கெட்டீர்;
பற்பலரும் போற்றுகிற குலத்தவரே
சகுதென்னும் பண்பி னாரை
முற்பட்டு வதைத்தீரேல் பின்படுவீர்”
எனக்கூறித் தடுக்க முன்னர்
மற்போரில் ஈடுபட்டோர் அனைவருமே
மனம்மாறி மறைந்து போனார்; 9
|