‘உடனே மதீனாவுக்குச் செல்க’
என்றார் செபுறயீல்
இனியவர் உயிரை மாய்க்க இன்னார்கள் நினைத்துப் போகக்
கனிமொழி செபுறயீல் தாம் கலைமுகம்மதுபால் தோன்றி
“நனிபகை கொண்டார் தீயர் நாள்பல கடத்திடாமல்
இனிமதீ னாநல் லூரை ஏகுதல் நலமே!” என்றார். 27
இறைவன் பகையைத் தாக்கக்
கூறினார்
ஆங்குநீர் ஏகி வாழ்ந்தே
அமைதியாய் இசுலாம் தன்னைப்
பாங்குடன் வளர்க்கும் போதில் பகைவர்கள் எதிர்த்து வந்து
தீங்குதான் புரிவார்ஆகில் திகைக்காமல் பகையைத் தாக்கி
ஓங்குக என்று இறைவன் சொன்னான் என்றனர் வானோர்
ஆங்கே! 28
மக்காவை நீங்க எண்ணினார்
“அறிவிப்பு வந்த” தென்றே அகத்தினால் மகிழ்ந்த நல்லோர்
அறிவித்த நபிப்பட்டத்தின் அரும்பதி னான்காம்
ஆண்டில்
நெறியுள ரபீயுலவ்வல் நேர்ஐந்தில் திங்கள் நாளில்
நறுமணத் தோன்றல் மக்கா நகர்நீங்கத் திட்டமிட்டார். 29
பகைவர் ஒன்று திரண்டனர்
இறைநெறி புரண்ட மாக்கள் இச்செய்தி கேட்டெழுந்தே
“மறையவன் மதீனா போகும் மனத்தினன் ஆகிவிட்டான்
விரையவே வருவீர் வெட்டி வீழ்த்துவோம்” என்று கூற
முறையிலார் எல்லாம் கூடி மொய்த்தனர் படைகளோடே; 30
“வெளியில் வருவான் பிடித்துக்கொல்வோம்”
என்றனர்
இல்லத்தைச் சூழ்ந்து கொண்டோர் இயம்பினார் அவரவர்கள்
உள்ளத்திற் கேற்ற வாறே, “உள்ளேதான் இருப்பான் ஆனால்
கள்ளத்தில் மிக்கான் நந்தம் கண்ணில்தான் படாமலேயே
செல்லவும் கற்றி ருப்பான் சிக்கெனப் பிடித்துக் கொல்வோம்; 31
இவனைப் போல் நாம்
கண்டதில்லை
வீட்டினுள் இருப்பான் போல விளையாடிக் கண்ணைக் கட்டிக்
காட்டிலும் உலவச் செய்வான் கைதேர்ந்த கெட்டிக் காரன்
ஓட்டிலே கூட ஒட்டி உடலையும் மறைத்துக் கொள்வான்
நாட்டிலே இவனைப் போன்றோர் நாம் கண்ட தில்லை”
என்றார். 32
|