அபூபக்கரை அழைத்தார்
திருக்குர்ஆன் தன்னில்
உள்ள திகழ்யாசீன் பாடம் ஓதி
உறக்கத்தில் ஆழ்ந்த பேரின் உறுமுகத் தில்மண்
தூவி
இரக்கத்தார் அபூபக்கர்தம் இல்லத்தின் முன்னே சென்றாங்கு
உரக்கத்தான் அழைத்தார் அந்த ஒளியாரும் வெளியே
வந்தார்; 39
இரண்டு ஒட்டகம் கொண்டு வருக
வந்தார்முன் நடந்த வெல்லாம்
வகையாக மொழிந்தார் கோமான்;
“முந்தியே மதீனா செல்ல முயலுவோம்” என்று கூறி
“நந்தம்நற் பயணத் துக்கு நல்வகை உதவு மாறு
சொந்தஒட் டகம் இரண்டை தொடர்ந்துடன் தருவீர்”
என்றார். 40
நேர்மை மாறாச் செல்வர்
நட்ட நல்லார்க்குக் கூட நன்னயம் மாறாச் செல்வர்
ஒட்டகம் தந்தவர்க்கே உரியதாம் தொகையை ஈந்து
மட்டிலாப் பெருமை மிக்க மாந்தனார் நபிகள் நல்லார்
முட்டிய பகைவர் தம்மை முழுதும் ஏமாற்றிச் சென்றார். 41
ஆமிறு என்பவனையும்
வரக் கூறினார்
தந்த ஒட்டகங்கள் தம்மைத்
தவுர்மலைக் குகைக் கண்கொண்டு
வந்திடும் ஆள்குறித்து வழியுணா கட்டிக் கொண்டு
நந்தம் ஆமிறுஎன்பானை நல்லாடு மேய்ப்பதைப் போல்
வந்துநாள் தோறும் போகும் வழிமுறை கூறிப்
பின்னர்; 42
அபூபக்கரும் விரைந்தார்
நல்லபூ பக்கர் தம்சீர்
நாடும்நல் மனைவி யார்க்குச்
சொல்லியே விடையைப் பெற்றுச் சுடர்மணி அப்துல் லாவாம்
வல்லமை மைந்த னாரை வருகென அழைத்துக் கொண்டு
வெல்லும்சீர் நபியா ரோடும் விரைந்தனர்
தவுர்மலைக்கே! 43
இறைப்பற்று இல்லாதவர்
கண்விழித்தார்
உறக்கத்தில் ஆழ்ந்து
வீழ்ந்த ஒளியிலா மனத்த வர்கள்
சிறப்பற்றுக் கண் விழித்துச் சிந்தனை வரப்
பெற்றார்கள்
இறைப்பற்றே இல்லா நெஞ்சர் இறைவனின் தூதனாரை
வரப்பற்ற சொற்களாலே வசைவரப் பேசிப் பேசி” 44
|