ஆயர்கள் குலத்தின்
ஆமிறு
அருளையே பொருளாய்க் காக்கும் ஆயர்கள் குலத்துத் தோன்றல்
இருளையே உளம்கொள்ளாமல் இறைவனை வணங்கு கின்ற
மருளிலான் ஆமிறு அந்த மலையினில் ஆடு மேய்க்கும்
பொருளினில் ஆங்கே சென்று புகழோர்க்கு நலங்கள்
செய்தான். 51
தவுர்மலையை அடைந்து தேடினான்
ஊரினைச் சுற்றி உள்ள ஒவ்வொரு இடமும் பார்த்தும்
நீரிலாக் கிணற்றுக்குள்ளும் நெடுந்தலை நீட்டிப் பார்த்தும்
நேருள மலை இடுக்கில் நெருங்கியே பார்த்தும் பின்னர்க்
காருள தவுர்மலையின் கருங்குகை வாயில் வந்தார். 52
புறாக்களும் சிலந்தியும்
காத்தன
வஞ்சகர் வருவார் என்று வருந்திய சிலந்திக் கூட்டம்
பஞ்சிலாத் தம்வாய் நூலால் பரிவுடன் வலைகள் பின்னி
அஞ்சிறு குகையின் வாயில் அனைத்துமே மறைத்து வைக்கக்
குஞ்செழும் முட்டை காக்கும் குறும்புறாக் குடும்பும்
கண்டார். 53
இறையருள் நம்மைக் காக்கும்
கொடியவர் வந்திருக்கும்
கூச்சலைக் கேட்டு, “நம்மைப்
பிடித்திட வந்து விட்டார் பெருந்தொல்லை பட்டோம் என்று
துடித்துஅபூ பக்கர் சொல்லத் தூயவர் “அஞ்சா தீர்கள்
அடித்தளம் இட்ட நல்லோன் அருள்காக்கும் நம்மை”
என்றார். 54
பாழடைந்த இக்குகையுள் இருக்க முடியாது
சிலந்திகள் பல்லாண்டாகச்
செயும் வலை அடைத்திருக்க
நலந்திகழ் புறாக்குடும்பம் நடுக்கமே இன்றி வாழ
இலங்கும் இக் குகையுட் பக்கம் எவர்நுழைந் திடவும் கூடும்?
விலகுங்கள்” என்று கூறி வேற்றிடம் நாடிப் போனார். 55
***
|