பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்271


ஏன் கடித்தாய் பாம்பே?

“கடித்த தேனோ? சொல்” என்றார் கரும்பாம்பு அதனைக் கேட்டவுடன்
துடித்துத் துடித்தே “ஐய! யான் தூயன் தீமை செய்யவில்லை;
பிடித்த கொள்கை எம்முன்னோர் பெரியோய் தங்கள் வரவுதனை
எடுத்துக் கூறி இருந்தது போல் இனியோர் தாமும் வந்தீர்கள். 13

உம்மை வணங்கவே வந்தேன்

வண்ண உரையும் தண்ணெழிலும் வாய்த்த மன்னர் நறுமணமும்
கண்ணார் மலையின் அகமெல்லாம் கனியக் கண்டேன் அதனாலே
அண்ணால் கண்டு சலாம்சொல்ல அடியேன் வந்தேன் முன்னாலே
மண்ணாள் வாழ்க்கை மாண்புறுமே மன்னா! உம்மைக் கண்டாலே! 14

என்முயற்சியைத் தடுத்தார்

என்னால் பார்க்க முடியாமல் இனியார் செய்தார் இச்செயலால்
பன்னாள் செய்த முயற்சி எலாம் பாழாய்ப் போகச் செய்தாரே
நன்னாள் என்று களித்தேனை நலியச் செய்தார் அதனாலே
பின்னால் தானே யான்கடித்தேன் பெரியோய்” என்று பாம்புரைக்க; 15

நீ வேண்டுமென்றே கடிக்கவில்லை

“நீதி உணர்ந்த நெடும்பாம்பே நெருங்கிக் கண்டு நலம் கனிந்தாய்
சாதிப் பண்பால் தான் கடித்தாய் சாவச் செய்யும் கருத்தில்லை
மீதி வாழ்நாள் மிகுநலமே மேவி வாழ்வாய்” எனக்கூறி
ஆதி முதல்வர் தூதர் நபி அதனைப் போகச் சொன்னார்கள். 16

பாம்பு கலிமா ஒதியது

நல்ல பாம்பு நேர்வந்து நபியார் பாதம் தனை வணங்கி
வல்ல இசுலாம் வளர்நெறியின் வாய்மைக் கலிமா எடுத்தோதி
மெல்ல ஊர்ந்து சென்றதுவே மேனிகருத்த அபூபக்கர்
எல்லாம் கண்டு வியந்திருக்க எழிலார் நபியார் முன்வந்தார். 17

பாம்பின் நஞ்சு நீக்கினார்

களைத்த மேனிக் கடிவாயில் கனிவாய் உமிழ்நீர் நபிபெருமான்
உளத்தின் நல்ல உணர்வோடும் உமிழ்ந்து தொட்டுத் தடவியதும்
நிலைத்த நஞ்சு மேனியினை நீங்கி இறங்கி வடிந்ததுவே
களித்த நெஞ்சர் அபூபக்கர் கலக்கம் தவிர்த்துக் கனிந்தனரே! 18