வந்தவன் திருந்தினான்
ஓடிய குதிரை ஒடுங்கிடக் கண்டான்
உளம்தடு மாறினான் அவ்வாள்
கூடிய மட்டும் கொழும்பரி உதைத்தான்
குந்திய வன் சுறாக்கத்து
பீடியல் நபியார் பெரும்புகழ் உணர்ந்து
“பிழையினைப் பொறுத்திடு” கென்றான்
நீடிய பகைக்கும் நிழல்தரும் கோமான்
நெருக்குதல் விடுஎன” உரைத்தார். 24
சுறாக்கத்து மீண்டும் எதிர்த்தான்
பாலினை ஊட்டிப் பரிவது காட்டிப் பாம்பினை நாம் வளர்த்தாலும்
மேல்வினை புரியாக் கீழ்வினைப் பாம்பு மேனியைக்கொத்துதல் இயல்பே
போல்வினை புரிந்தான் புல்லிய மகனாம் புகழில செயும் சுறாக்கத்தே
ஆள்வினை உடைய அருள்முகம்மதுவும்அருட்செயல் ஒன்றையேதொடர்ந்தார்.25
மீண்டும் மீண்டும் மன்னித்தார்
மும்முறை இதுபோல் முயல்சுறாக் கத்து முழுவதும் களைத்தவன் ஆகி
எம்முறை முயன்றும் எழில்முகம் மதுவை எட்டுதல் அரிதென எண்ணி
அம்முறை யவனும் அகம்பொலிந்தவனாய் “அருளுக” எனப்பணிந் திடவும்
தம்முறை மாறா தகுநல நபியார் தலைவரும் அருள்சுரந் தனரே. 26
சுறாக்கத்து முழுவதும் திருந்தினான்
விடுதலை அடைந்த விலங்கது போலே
விடுபட அச்சுறாக் கத்து
“கெடுதலை நினைந்தேன் கீழவன் நெறியால்
கெழுநலம் இன்றுநான் உணர்ந்தேன்
அடுதலைத் தவிர்த்தேன் அருளுக” என்றே
அகந்தொடும் வகையிலே பேசிக்
கடிதுடன் மக்கா நகரினை அடைந்தான்
கண்டதை மறந்தவன் போலே! 27
மதினா நோக்கிப் போனார்
தூயவன் துணையால் அன்புத் தோன்றல்தம் அன்ப ரோடும்
தீயவன் அபூசகுல்செய் தீங்கினைப் புறத்தில் தள்ளி
ஓயவும் ஓரிடத்தில் ஒட்டகம் தன்னை ஊர்ந்தும்
போயவர் மதினா நோக்கிப் போம்வழி தனிலே ஓர்நாள்; 28
|