பக்கம் எண் :

274துரை-மாலிறையன்

இடைச்சிறுவர்கள் வந்தனர்

அழகிய சிற்றூர் ஒன்றே அவர்முன்னர்த் தெரியக் கண்டார்
செழுமையும் சிறப்பும் மிக்க சிறுவர்கள் ஆட்டு மந்தை
உழுவயல் வரப்பில் மேய்த்தும் உறுதழை கொய்து தந்தும்
பொழுதினைக் கழித்துப் போகும் பொய்யிலா உளம்கொண்டார்கள். 29

தாய்போல் பரிவு காட்டும் ஊர்

இடையர்கள் வாழும் அன்பின் இதயத்தால் அந்தச் சிற்றூர்
கொடைவளம் நிறைந்த தென்னும் கொள்கையில் சிறந்து தோன்ற
அடைபவர் எவர்க்கும் அவ்வூர் அன்னைபோல் பரிவுகாட்டும்
அடையாளம் இருந்ததாலே அனைவரும் ஆங்கே போனார். 30

குடிசைமுன் ஒரு மூதாட்டி இருந்தாள்

சின்னதோர் குடிசை வீடு செழுவண்ணக் கோல வாசல்
அன்னதோர் வீட்டின் பக்கம் அமைதியின் உருவமாகக்
கன்னலின் வெண்பூக் காட்சி காட்டிடும் கூந்தல் கொண்ட
அன்னையர் குலத்தாள் இந்நாள் அவ்வையாய்த் தோற்றம் கொண்டாள். 31

உம்மி மகுபது என்பது அவள்பேர்

கண்ணிலே இரக்கம் உண்டு கருத்திலே இறுக்கம் இல்லை
புண்ணிலை என்றால்கூடப் புதுப்புதுநோய் கொண்டாள்போல்
எண்ணிடும் பருவம் கொண்டாள் இருமலும் இளைப்பும் கொண்டாள்
மண்ணிலே வாழ்வாள் உம்மி மகுபது என்னும் பேர் கொண்டே; 32

என்னிடம் ஆட்டு மந்தை இல்லை

இடைக்குல நன்மூ தாட்டி இருப்பிடம் சென்ற நல்லோர்
கிடைக்குமா பாலே? என்று கேட்டனர்; அவளோ, “ஐய
கிடைக்கென மடக்கி வைக்கக் கெழுமிய மந்தை இல்லேன்
அடைக்கலம் வந்தவர்க்கும் ஆட்டுப்பால் கிடைக்கா” தென்றாள். 33

அதோ உள்ளதே ஆடு

“எட்டிய தொலைவில் உள்ள இளைத்தசெம் மறிஆ டொன்று
முட்டியில் வலிமை இன்றி முதியகூன் கிழவி போல
ஒட்டிய மடியும் மெய்யும் ஒடுங்கிய நிலையில் சின்ன
குட்டியைப் போலும் மண்ணில் குந்திஆங்(கு) உளதே” என்றார். 34