பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்275


பால் கறக்காத ஆடு

எலும்பொடு தோலு மாக இருக்கின்ற ஆட்டில் எங்கே
நலங்கெழு பாலும் தோன்றும்? நல்லவர் நீங்கள் பாவம்
கலங்கியே பாலும் கேட்டீர் கறக்கவே இயலாதென்றாள்
புலம்பிய முதியோள் தன்முன் பொலிந்தநன் னபியார் அண்ணல்; 35

இந்த ஆடு பால் கறக்கும்

ஒடிந்துவீழ்ந் திடுவாள் போல்கூன் உடலினாள் இருகண்காண
முடிந்தது சுரப்பென்கின்ற முறையினில் இருந்த ஆட்டின்
மடியினைக் கையால் தொட்டு மகிழ்வுடன் மீண்டும் இங்கே
முடியும்பா ரம்மா என்று முன்வந்தார் நபிகள் கோமான். 36

பால் நிரம்பி வழிந்தது

அண்ணலார் இடத்தில் அந்த அவ்வையும் செம்பை ஈந்தாள்
வண்ணமாய்ப் பால் கறக்க வந்தவர் ஆட்டை அன்புக்
கண்களி னாலே பார்த்தார் கறந்தபால் கலம்நிரம்பி
நண்ணிய ஊரார்க் கெல்லாம் நல்கியும் குறைய வில்லை. 37

இதோ பாருங்கள் இவரே விண்ணவர்

“புண்ணியம் செய்யச் செய்யப் புதுப்புது நலமே தோன்றும்
மண்ணிலே என்பார் அந்த மலர்ச்சியை ஈங்கே கண்டேன்
விண்ணிலே இருந்து வந்த வேந்தரும் இவர்தாம்” என்றே
எண்ணினாள் அம்மூதாட்டி இசைந்தவர்க் கெல்லாம் காட்டி. 38

ஊர்மக்கள் எல்லாரும் கலிமா ஓதினர்

உற்றசிற் றூரின் மக்கள் உளமெலாம் மகிழ்ச்சி கொண்டு
கற்றபே ரறிஞர் போலக் கனிந்தனர் நபிநல்லார்மேல்
பற்றுவைத் துயர்த்திப் போற்றிப் பரிவுடன் கலிமா ஓதி
மற்றவர் அனைவரையும் மாண்நெறி செல்ல வைத்தார். 39

மதினாவை நோக்கிச் சென்றார்

பால்நிறைந் தளித்த மேலோர் பரிவினார் சுற்றிச் சூழ
மேல்நினைந்து அன்ப ரோடும் மிளிர்மதி னாவை நாடித்
தேன்நிகர் உரைகள் பேசித் தெளிவினை எவர்க்கும் தந்து
வானின்சீர்த் திங்கள் மண்ணில் வருவதைப் போலச் சென்றார். 40