பக்கம் எண் :

276துரை-மாலிறையன்

குபா சிற்றூர் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்

வழியிலோர் சிற்றூர் அந்த வாய்மையூர் குபா என் பாராம்
பழியிலா மக்கள் வாழும் பண்பினால் செழித்த ஊராம்
தொழில் நலம் புரிவ தொன்றே; தோன்றுவார் நபியார் என்றே
கழிமகிழ் வுற்ற மக்கள் காத்திருந் தனரே ஆங்கே. 41

திருக்குர்ஆன் ஓதி மகிழ்ந்தனர்

செம்மலும் வந்த தாலே “செழித்தனம்” என்று கூறி
அம்மணி ஊரார் வானத்(து) அருமக னாரை வாழ்த்தித்
தம்முடன் இருக்க வைத்துத் தகுந்திருக் குர்ஆன் ஓதி
மும்மடங்கு உவகை எய்தி முகம்மது வோடி ருந்தார். 42

அலீயார் எழுந்து நபியாரைத் தேடினார்

பச்சைப்போர் வைக்குள் தூங்கிப் படுத்தவர் அலீயார் தம்மைக்
கச்சைக்கைக் கத்தி யார்கள் கண்டதும் நடந்த மற்ற
மிச்சத்துச் செயலை எல்லாம் மிகுதியாய்த் தெரிந்து கொண்டு
உச்சிமேல் பகைமை ஏந்தி ஓடினார் தேடி னாரே. 43

நபியார் கட்டளைப்படி பொருள்களை ஒப்படைத்தார்

எளியார்கள் தமைஏ மாற்றி ஏகிய பின்னர் அன்பர்
அலியார்தாம் ஐயன் தந்த அரும்பொருள் எவர்எவர்க்கே
ஒளியாமல் தரச் சொன்னாரோ உற்றவை எல்லாம் தந்து
மலியும்பேர் ஆர்வம் கொண்டு மகம்மது தமைப்போய்ச் சேர்ந்தார். 44

குபாவில் பள்ளிவாசல் எழுப்பினர்

இசுலாமை ஏத்திப் போற்றும் எழில்நகர் “குபா” வில் என்றும்
இசைபெறும் வண்ண மாக இருந்திடப் பள்ளிவாசல்
அசைவிலா முயற்சி கொண்டே ஆக்கினார் அந்த நாளில்
நசைகொண்டு மக்கள் எல்லாம் நல்கினார் உடலு ழைப்பே! 45

வெற்றியைக் குவிப்பவர்கள் இவரே!

தொழுகைக்குப் பள்ளி வாசல் தோற்றுவிப் பவனும் என்றும்
எழுகையில் இருக்கையில் வான் இறைதிருக் குர்ஆன் ஓதும்
வழுவிலா நெறிகொண்டானும் வளர்வினைக் கிரவில் எல்லாம்
விழித்திருப்பானும் அன்றோ வெற்றியைக் குவிப்பார் ஆவார். 46